செய்திகள்

தற்காலிகமாக முடிவுக்கு வந்த வாழைச்சேனை காகித ஆலை ஊழியர்களின் சுழற்சி முறையிலான போராட்டம் (படங்கள்)

வாழைச்சேனை காகித ஆலை ஊழியர்கள் தங்களது சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தினை இன்று வியாழக்கிழமை தற்காலிகமாக நிறைவிற்கு கொண்டு வந்தனர்.

இவர்கள் தமது போராட்டத்தினை கடந்த 17 நாட்களாக மேற்கொண்டிருந்தனர். தங்களுக்குரிய 5 மாத நிலுவைப் சம்பளப் பணம் வழங்கப்படாமை தொடர்பாகவே காகித ஆலை ஊழியர்களினால் தொடர் போராட்டங்கள் முன்னெடுத்து வந்தனர்.

புதன்கிழமை மாலையன்று கைத்தொழில் துறை அமைச்சின் செயலாளருடன் காகித ஆலையின் தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் ஆலையின் உயர் அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையினையடுத்து இப்போராட்டம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டதாக தொழிற்சங்கத் தலைவர்கள் தெரிவித்தனர்.

பேச்சுவார்த்தையின் போது 2015ஆம் ஆண்டிற்காக வழங்கப்பட்டுள்ள 3 மாத சம்பள நிலுவையினை பெற்றுக் கொள்ளும் படியும், 2014 ஆம் ஆண்டிற்கான (மார்ச், ஏப்ரல்) மாதங்களுக்கான நிலுவையையும் எதிர்வரும் ஏப்ரல் மாத சம்பளப் பணத்துடன் சேர்த்து வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அமைச்சின் செயலாளர் தெரிவித்த உத்தரவாதத்தின் அடிப்படையில் தொழிற்சங்க தலைவர்கள் மேற்கொண்ட தீர்மானத்தின் அடிப்படையில் இவ் தொடர் போராட்டம் கைவிடப்பட்டதாக காகித ஆலையின் தொழிற்சங்கத் தலைவர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து தொழிலாளர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் தங்களது 3 மாதங்களுக்கான சம்பள நிலுவைப் பணத்தினை ஆர்வமாக காலை வியாழக்கிழமை பெற்றுக் கொண்டனர்.

இதேவேளை கடந்த 3 நாட்களாக தொழிலாளர்கள் சிலர் காகித ஆலையின் கூரையின் மேல் ஏறி நின்றும் டயர்களை எரித்தும் ஆலையின் முகாமைத்துவ நிர்வாகப் பணிகள் முற்றாக இயங்காத படி நிர்வாகப் பிரிவுளின் கதவுகளை பூட்டி எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தினை மேற்கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

vaalaichenai factory (1)

vaalaichenai factory (2)

vaalaichenai factory (3)

vaalaichenai factory (4)