செய்திகள்

தலைதூக்கும் இனவாதத்தை தோற்கடிப்போம்! கொழும்பில் மனோ தலைமையில் மே தின நிகழ்வு

ஜனநாயக மக்கள் முன்னணியின் இந்த வருட மேதின ஊர்வலமும், கூட்டமும் கொழும்பு, கொட்டாஞ்சேனையில் கட்சி தலைவர் மனோ கணேசன் தலைமையில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. “தலைதூக்கும் இனவாதத்தை தோற்கடிப்போம்” என்ற தொனிப்பொருளில் கண்காட்சிகளுடன் கூடிய ஊர்வலமும், கூட்டமும் நடைபெறும்.

மே முதலாம் திகதி வெள்ளிக்கிழமையன்று பிற்பகல் 1 மணியளவில் ஊர்வலம் கொட்டாஞ்சேனை புனித அந்தோனியார் ஆலயத்துக்கு எதிரில் ஜம்பட்டா ஒழுங்கை சந்தியில் இருந்து ஆரம்பமாகி, ஜம்பட்டா வீதி, சங்கமித்த வீதி, மகாவித்தியாலய வீதி, புதுசெட்டி தெரு, விவேகானந்தா மேடு, ஜிந்துபிட்டி, கண்ணார தெரு, கதிரேசன் வீதி, புனித அந்தோனியார் வீதி ஆகிய வழிகளில் வந்து மீண்டும் ஜம்பட்டா வீதியை அடைந்து கொச்சிக்கடை ஜம்பட்டா ஒழுங்கை சந்தியில் மேதின கூட்டம் நடைபெறும்.

மீண்டும் தலைதூக்கும் இனவாதத்திற்கு எதிராக ஊர்வலத்தில் கோஷங்கள் எழுப்பட்டு, கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும். ஊர்வலத்தில், கொழும்பு மாநகர, கொலொன்னாவை, அவிசாவளை, தெஹிவளை-மொரட்டுவை, கம்பஹா, மலையக செயலணிகள் மற்றும் ஜனநாயக மகளிர் இணைய, ஜனநாயக இளைஞர் இணைய பிரிவுகள் தத்தமது பதாகைகளுடன் கலந்து கொள்ளும் என ஜனநாயக மக்கள் முன்னணி ஊடக செயலகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.