செய்திகள்

தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதியா ஐ நா அறிக்கை பின்போடப்பட்டமை குறித்த மக்கள் குரல்

போர்க்குற்றம் தொடர்பாக இலங்கை மீதமான ஐ நாவின் அறிக்கை வெளியீடு எதிர்வரும் செப்டெம்பர் வரை தாமதிக்கப்பட்டமை பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுக்கப்பட்ட நீதியா என்பது இன்று  பலருடைய கேள்வியாக துருத்தி நிற்கின்றது. ஆண்டுகள் பலவாக தமக்கு நீதி நிடைக்கும் என்று ஐக்கிய நாடுகள் மனிதஉரிமைகள் சபையின் தீர்ப்புக்கு காத்திருந்த  மக்களுக்கு மீண்டும் பெப்ரவரி 16ம் திகதி அறிவிக்கப்பட்ட காலதாமதம் நம்பிக்கையீனத்தை அளித்திருக்க வேண்டும்.  இதன் காரணமாகவே தாயகத்திலும் சரி புலம்பெயர் தேசத்திலும் சரி பல கவனயயீர்ப்புப் பேராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

[youtube url=”https://www.youtube.com/watch?v=sauvuiLinW0&feature=youtu.be” width=”500″ height=”300″]

யாழப்பாண பல்கலைக்கழக சமூகத்தின் ஏற்பாட்டில் பெப்ரவரி 25ம் திகதி இடம்பெற்ற நீதிகோரலுக்கான அமைதிப் பேரணியில் மன்னார் மாவட்ட ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகை உள்நாட்டு விசாரணையில் நம்பிக்கையின்றி ஐ. நாவை நாடியிருந்தும், அவர்கள் எம்மை கைவிட்டு விட்டதாக தெரிவித்தார். புலம்பெயர் தேசங்களில் தீர்க்கமான நல்முடிவு தகர்ந்துபோனதாக கோபத்திலும் வேதனையிலும் ஆர்ப்பாட்டங்களை நடத்தினார்கள் சிலரின் உருவப்படங்களை எரித்தார்கள்.

இந்த நம்பிக்கையீனங்களுக்கும் கோபங்களுக்கும்  உணர்ச்சிவாதப் போராட்டங்களுக்கும் மத்தியில்  தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் மற்றும் பலர் இந்த காலதாமதம் நன்மையளிக்கும் முகமாகவே அமையும் என்று கூறுகின்றார்கள். அவர் மாத்திரமின்றி வாதவிவாத விடயமாக மாறியிருக்கும் இந்த ஐநாவின் பிற்போடப்பட்ட அறிக்கை வெளியீடு தொடர்பாக இணையத்தளங்களிலும் சரி சமுக வலைத் தளங்களிலும் சரி பலர் பலவிதமான அறிக்கைகளையும் தீர்ப்புக்களையும் தெரிவித்துக்கொண்டிருக்கின்றார்கள்.

தாமதப்படுத்துவதற்கான காரணங்கள் என்ன? துரிதப்படுத்துவதற்கான தேவைகள் என்ன என்பது ஆண்டுகள் பலகடந்தும் யுத்தத்தின் பேரில் பாதிப்புற்ற மக்களின் நீதிகோரலை முன்வைத்தே பார்க்கப்படவேண்டும். கடத்தப்பட்டடோர் காணாமற்போனோர் வதைக்கப்படோர், கொல்லப்பட்டோர், கைதானோர் என மீறப்பட்ட மனித உரிமைகள் கணக்கற்றவையாக நீண்டு போயிருக்கின்றன. யுத்த நீதிக்குப் புறம்பாக இலங்கை அரசு மேற்கொண்ட போர்க்குற்றங்களை நீதியின் மேல் நின்று விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்பதே தமிழ் மக்களுடைய  ஆதங்கமும் வேண்டுதலும். அரசியல் தந்திரங்களோ அதன்பேரில் கட்டவிழ்ந்து நிற்கும் சுயலாபங்களோ மக்களுக்கு புரியாதவை. நீதியற்ற முறையில் பறிக்கப்பட்ட தம் உறவுகளுக்காகவும் நியாயமற்ற வகையில் மேற்கொள்ளப்பட்ட அநீதிகளுக்காகவுமே இந்த மக்கள் அங்கலாய்க்கிறார்கள் காத்திருக்கின்றார்கள்.