செய்திகள்

தாயகம், தேசியம், தன்னாட்சி என்று மந்திரம் ஓதுவதை விடுத்து மாற்று அணியை உருவாக்கி செயற்பட வேண்டியதன் அவசியம்

லோ. விஜயநாதன் 
சிங்கள பெளத்த பேரினவாதம் என்றுமில்லாதவாறு இன்று மீள் எழுச்சி கொண்டுள்ளது. இதன் வெளிப்பாடாகவே நடுநிலையான சிங்களவர்கள்கூட இது “சிங்கள பெளத்த நாடு” என்று உச்சரிக்க தொடங்கியிருக்கிறார்கள். தூரஸ்திஸ்டவசமாக ஒரு சில தமிழ் , முஸ்லிம் தலைவர்கள் கூட இது ஒரு சிங்கள பெளத்த நாடு என்று கூறமுற்பட்டுள்ளனர். அண்மை காலமாக  சிங்கள பேரினவாதத்துக்கு  சேவகம் செய்துவரும் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் சிறுபான்மை மதங்கள் சார்பில் இது ஒரு பெளத்த நாடு என்று முதன் முதலில் கூறியிருந்தார். இவரது இந்த கருத்தை மிகவும் துணிச்சலான முறையில் நிதி அமைச்சர் மங்கள சமரவீர மறுத்திருந்தார். மிகவும் பாரதூரமான பேராயரின் இந்த கருத்துக்கு தமிழ் மக்களின் உரிமைகளுக்காக அளப்பெரும் பணியாற்றிவரும் வடக்கு கிழக்கு கத்தோலிக்க திருச்சபைகள் கண்டித்து அதிருப்தி வெளியிடாமை ஆச்சரியம் அளிக்கிறது. வட மாகாண முதலமைச்சர் நீதியரசர் விக்னேஸ்வரன் இலங்கை ஒரு பௌத்த நாடு என்ற கருத்துக்கு மறுப்பு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டபோதிலும் தமிழ் அரசியல் கட்சிகள் இந்த விடயத்தை கவனத்தில் எடுத்து கடும் எதிர்ப்பை வெளியிடாமை ஏமாற்றம் அளிக்கிறது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் குறிப்பாக தமிழரசு கட்சி தலைவர்களின் செயற்பாடுகளே தமிழ் மக்களை இன்று  இவ்வாறு நடுத்தெருவுக்கு கொண்டுவந்திருக்கிறது.

1.எந்த பேரினவாதத்தை எதிர்த்து கடந்த 70 வருடங்களாக  தமிழ் மக்கள் போராடுகிறார்களோ அதன் அடிப்படை இனவாத கோட்பாடான ‘ இலங்கை பௌத்த நாடு ‘ என்பதை ஏற்றுக்கொள்ளும் வகையில் உத்தேச அரசியலமைப்பு சீர்திருத்த முன்மொழிவுகளில் பெளத்தத்துக்கு முதன்மை சாசனம் வழங்கப்படுவதற்கு ஒத்துக்கொண்டமை.

2.தனியான சமாதான அணுகுமுறைகளினூடாக காணப்படவேண்டிய எமது இனப்பிரச்சனைக்கான தீர்வை அரசியல்யாப்பு சீர்திருத்ததுக்குள் கொண்டுபோய் இனப்பிரச்சனை என்ற ஒன்றே நாட்டில் இல்லை என்ற ஒரு நிலையை ஏற்படுத்தியுள்ளமை.

3. வராத ஒரு தீர்வுக்காக தமிழ் தேசிய கோட்பாடுகளான தாயகம், சுயநிர்ணயம் போன்றவற்றை கைவிட்டமை.

4. எதனையுமே பெறாமல் 1976 ஆம் ஆண்டு  தமிழ் மக்களால் வழங்கபப்ட்ட தனி நாட்டு ஆணையை கைவிட்டமை.

5.இனஅழிப்பு என்ற அடிப்படையில் தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தை முன்னெடுத்துச்செல்வதற்கு இருந்த சந்தர்ப்பத்தை கைவிட்டு மாறாக இனஅழிப்பு நடைபெறவில்லை என்று மறுத்ததுடன் ஒரு அரசு செய்யும் குற்றங்களையும் ஒரு போராட்ட அமைப்பு செய்யும் குற்றங்களையும் சம அளவில் ஒப்பிட்டு சர்வதேச விசாரணைக்கான  நடவடிக்கைகளை பலவீனமடைய செய்தமை.

இவை எல்லாவற்றையும் படிப்படியாக செய்து முடித்த தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எமது உரிமைக்கான போராட்டத்தை சலுகை அரசியலாக மாற்றும் சிங்கள பேரினவாதத்தின் நிகழ்ச்சிநிரலின் இறுதி அத்தியாயத்தை  நிறைவேற்றுவதற்காக பல பில்லியன் ரூபாக்கள் கம்பெரலிய திட்டம், பனை அபிவிருத்தி நிதியம் ஆகியவற்றின் போர்வையில் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதன் நோக்கம்  தமிழ் மக்களை சலுகை அரசியலை நோக்கி நகர்த்துவதுடன் எதிர்காலத்தில் சலுகை அரசியலில் ஈடுபடும் தமிழரசு கட்சி போன்ற கட்சிகளை தமிழ் மக்கள் தமது தலைமைகளாக தெரிவுசெய்வதற்கான அடித்தளத்தை விடுவதுதான்.   இந்த திட்டத்தில் கூட  பெரியளவில் தமிழ் மக்களுக்கு   தொழில்வாய்ப்புக்களை உருவாக்கும் திட்டங்களோ அல்லது யுத்தத்தால் அழிக்கப்பட்ட மக்களின் வீடுகளை மீளவும் கட்டிக்கொடுத்து ( 50, 000 வீடுகளை கட்டுவதான  முன்னைய போலி வாக்குறுதி) அவர்களை மீளவும் சொந்த இடங்களில் குடியமர்த்தும் திட்டங்களோ இல்லை என்பதை கவனிக்கவேண்டும்.

அன்று 2001 இல் ரணில் ஆட்சிபீடம் ஏறி சமாதான நடவடிக்கை என்ற மாயை ஊடாக ஆயுத போராட்டத்தை மழுங்கடித்து முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு வித்திட்டார்.  இன்று எமது உரிமைபோராட்டத்தை அரசியல் தீர்வு எனும் மாயையூடாக மழுங்கடித்து சலுகை அரசியலாக அதனை மாற்றி இனப்பிரச்சினை என்ற ஒன்றே இல்லை எனும் நிலைக்கு கொண்டுவந்து விட்டுள்ளார்.

ரணிலின் திட்டம் என்ன இது எங்கே போய் முடியப்போகிறது என்பவற்றை நன்கு தெரிந்துகொண்டே அரசாங்கத்துக்கு தமிழரசு கட்சி முழுமையான தனது ஆதரவை வழங்கிவந்தது. ஆனால், இன்று தேர்தல்வரும் நிலையில், அரசாங்கம் தம்மை ஏமாற்றிவிட்டது என்று தமிழரசு கட்சி தலைவர்கள் நீலிக் கண்ணீர் வடிக்க ஆரம்பித்துவிட்டனர். தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவுடன் இயங்கிவரும் இன்றைய அரசாங்கம் தான் என்றுமில்லாதவகையில் தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களம், வன இலகா, இராணுவம், மகாவலி அபிவிருத்தி என்று தமிழர் தாயகத்தின் ஆயிரக்கணக்கான பூர்வீக நிலத்தை  கடந்த 5 வருடங்களில் ஆக்கிரமித்துள்ளது என்பதை மக்கள் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்.

Elukathamil batticaloa 6

எம்மை சூழ்ந்துவரும் இந்த ஆபத்துக்களை உணர்ந்ததன் விளைவாகவே  ஒரு வலுவான மாற்று அணியின் அவசியத்தை விரைந்து உருவாக்கவேண்டும் என்று புத்திஜீவிகளும் தமிழ் தேசிய செயற்பாட்டாளர்களும் அண்மைக்காலமாக வலியுறுத்தி வருகிறார்கள்.  ஆனால், எமது அரசியல் பிரமுகர்களோ இந்த அவசியத்தை உணராமல், அவர் இந்திய உளவாளி, நேற்றுவந்தவர் தலைமை ஏற்பதா, அவரது கையில் இரத்தக் கறை இருக்கிறது,  இவ்வளவு காலம் கட்சியை சிரமப்பட்டு வளர்த்துவிட்டு கூட்டணிக்குள் போவதா, எமது சின்னம் என்னாவது, எமது கட்சி வளர்ச்சி என்னாவது என்றெல்லாம் சுயநலமாக சிந்திக்கிறார்களே தவிர தமிழ் மக்களைப் பற்றி சிந்திப்பதாகத் தெரியவில்லை. போராட்டத்தின் ஆரம்ப காலங்களிலும் இத்தகைய சுயநல சிந்தனைகள் காரணமாகவே தமிழ் அரசியல் கட்சிகள் ஓரணியில் திரண்டு காத்திரமாக செயற்பட முடியவில்லை.

ஆனால், விடுதலைப்புலிகள் தமது வல்லமையை பயன்படுத்தி தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்கி இருந்தனர். அன்று விடுதலைப்புலிகளிடம் ஆயுதபலம் இருந்ததனால் கூட்டமைப்பை ஒரு கட்சியாக பதிவுசெய்து பலப்படுத்த வேண்டிய தேவை அவர்களுக்கு  இருக்கவில்லை.  ஆனால், ஒரு கட்சியாக கூட்டமைப்பை பதிவுசெய்யாமை, ஆயுதப்போராட்டம் மௌனிக்கச்செய்யப்பட்டதன் பின்னர்  கூட்டமைப்பு ஒரு கட்சியாக பலப்படுத்தாமை யுத்தம் முடிவடைந்த பின்னர் கட்சிகளுக்கு இடையிலான போட்டி அரசியலை அதிகரித்து  இலகுவாக சில புல்லுருவிகளினால் அது  உடைக்கப்பட்டு பயணப்பாதை  மாற்றி அமைக்கப்படுவதற்கு காரணமாக அமைந்துள்ளது.

ஆகவே, மாற்று அணியை உருவாக்க பாடுபட்டுவருபவர்கள், இதனை கவனத்தில் எடுத்து இந்த மாற்று அணியானது ஒரு கூட்டாக அன்றி தமிழ் மக்களின் விடுதலையை வென்றெடுக்கும் ஒரு கட்சியாக ஒரு கொள்கையின் கீழ் அமைக்கப்படுவதற்கு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இல்லை என்றால், தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு நடந்த கதியே புதிய மாற்று கூட்டமைப்புக்கும் ஏற்படும்.

எமக்கான தீர்வு தொடர்பில் சிங்கள தரப்புடன் ஒரு இணக்கப்பாட்டை ஏற்படுத்துவது என்பது   சிங்கள பேரினவாதத்தின் அதிகபட்ச மக்கள் ஆதரவைக் கொண்ட தலைவர் ஒருவரின் ஊடாகவே சாத்தியமாகும் என்பதே இன்றைய யதார்த்தம். ஆனால் அப்படியான எந்த தீர்வும் எம்மக்களின் ஆகக் குறைந்த  அபிலாசைகளைக்கூட திருப்திபடுத்தாத தீர்வாகவே அமையும். ஆனால், எமது இலக்கு என்ன என்பதில் தெளிவாக நாம் இருந்துகொண்டு எதிர்காலத்தில் அந்த இலக்கினை அடைவதற்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாமல் கிடைக்கக்கூடிய தீர்வுகளை   பூகோள அரசியல் நகர்வுகளுக்கு ஏற்ப பயன்படுத்தி, இருக்கின்றவற்றை பாதுகாத்து அடிப்படை கோரிக்கைகளை கைவிடாமல் முன்நகர்ந்துசெல்லவேண்டிய ஒரு கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம்.  நில ரீதியாகவும் சனத்தொகை ரீதியாகவும்  பாரிய ஒரு அழிவில் இருந்து வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் தம்மை பாதுகாத்துக்கொள்ளும் தற்காப்பு நிலைக்கு செல்லவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். சத்தம் இன்றி முல்லைத்தீவு மிக வேகமாக தமிழர் கைகளை விட்டு சென்றுகொண்டிருக்கின்றது. மாகாண சபை அதிகாரம் இந்த  தற்காப்பு நிலையை பலமாக அமைப்பதற்கு போதுமானதல்ல.  இன்னமும் 5 வருடங்களுக்கு எந்த ஒரு தீர்வும்  சாத்தியம் இல்லாமல் போனால் எந்த ஒரு தீர்வுமே அவசியம் இல்லை என்ற நிலையே தமிழ் மக்களுக்கு அதன் பின்னர் ஏற்படும். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறுவதை எவ்வாறு ஸ்கொட்லாந்து தனது சுதந்திரத்துக்கான வாய்ப்பாக  இன்று
பயன்படுத்த முனைகிறது என்ற ராஜதந்திரத்தில் இருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ளவேண்டும்.

இலங்கைத் தீவைச் சுற்றி நடக்கும் என்றுமில்லாத பூகோள போட்டிக்குள் நாம் இன்று சிக்குப்பட்டுள்ளோம். இதை சரிவர கையாளகாமல் விடுவோமாயின் தமிழ் இனம் இலங்கையில் இருந்ததற்கான அடையாளங்களைத் தேடித்தான் பார்க்கும் நிலைதான் எதிர்காலத்தில் ஏற்படும். இந்த நிலை ஏற்படுவதை தடுப்பதற்கு நாம் ஓரணியில் திரண்டு எமது பயணப்பாதையை செப்பனிட்டு அரசியல் இராஜதந்திர அணுகுமுறைகளை கைக்கொண்டு முன்னோக்கி செல்ல முயற்சிக்க வேண்டும். எமது பயணப்பாதையை நாம் திட்டமிடும்போது வேறு நாடுகளின் முகவர்கள் எம்முடன் பயணப்பட்டாலும் நாம் பயப்பட வேண்டியதில்லை. ஏனென்றால் பயணப்பாதை எம்முடையது.

சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையலாம் என்பதற்கிணங்க எமது தாயகம் பாதுகாக்கப்பட்டால்தான் நாம் எதையும் எதிர்காலத்தில் அடையமுடியும். சிறிலங்கா அரச இயந்திரமானது இஸ்ரேலிய அணுகுமுறையை கைக்கொண்டு எமது தாயகப்பரப்பை ஆக்கிரமிப்பு செய்துவருகின்றது. இதை புரிந்துகொண்டு எமது தாயகத்தை பாதுகாக்கும் நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ளவேண்டும். விடுதலைப்புலிகள் முதல் இன்றுள்ள எமது தலைவர்கள் வரை எமது தாயகத்தில் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட குடியேற்றங்கள் வடக்கு கிழக்கில் இருந்து வாபஸ்பெறப்படவேண்டும் என்ற  கோரிக்கைகளை பேச்சுவார்த்தைக்கான முன் நிபந்தனைகளாக ஒரு பேச்சுக்கேனும் வைக்க  தவறியமையே எந்தவித தயக்கமும் இன்றி சிங்கள குடியேற்றங்கள் தொடர்ந்து நடைபெறுவதற்கு ஒரு காரணமாக இருக்கிறது.

ஆபத்தான நிலைமைகளை மாற்றி அமைப்பதற்கு நில அதிகாரம் பூரணமாக கிடைக்கக்கூடிய தீர்வுகளை நோக்கி இடைக்காலத்தில் நாம்  நகரவேண்டிய தருணத்தில் நிற்கிறோம். அதேவேளை நில அபகரிப்புக்கு எதிராக தொடர் போராட்டங்களை  தாயகத்திலும் சர்வதேச ரீதியிலும் மேற்கொள்வதனுடாக சிறிலங்கா அரசாங்கத்துக்கான அழுத்தங்களை அதிகரிக்க வேண்டும். ஆனால் எந்த போராட்டமானாலும் மக்கள் ஆதரவு இல்லையெனில் தோல்வியிலேயே முடிவடையும். கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய இடங்களில் சில மாதங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களில் ஓரளவுக்கு மக்கள்  பங்குபற்றி இருந்தபோதிலும், தற்போதைய நிலையில் மக்கள் ஆதரவு என்பது இத்தகைய போராட்டங்களுக்கு மிகவும் குறைவாகவே இருக்கிறது.  தற்போதைய தமிழ் தலைமைகளின் செயற்பாட்டினால் மக்கள் மிகவும் அதிருப்தியில் இருப்பதே இதற்கு காரணம். அத்துடன், உரிமை அரசியலைவிட சலுகை அரசியலே மேலானது என்ற எண்ணப்பாடு கணிசமானளவு மக்களிடம் ஏற்படத்தொடங்கி உள்ளது என்பதை கடந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

இதனால் தான் முன்னெப்போதையும் விட மாற்று அணி ஒன்றை கட்டி எழுப்ப வேண்டிய தேவை இன்று ஏற்பட்டுள்ளது. வாயினால் வடை சுடுவதை விடுத்து தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகிக்கும் கட்சிகள் கொள்கை அடிப்படையில் ஏனையவர்களையும் இணைத்துக்கொண்டு ஒன்றிணைந்த செயற்திட்டங்களில் இறங்கவேண்டும்.  வெறுமனே,  தாயகம், தேசியம், தன்னாட்சி என்று மந்திரம் ஓதுவதால் எதுவும் நடைபெறப்போவதில்லை. பொறுப்புக்கூறல் மற்றும் சர்வதேச விசாரணை ஆகியவற்றினூடாகவும், இந்தியா உட்பட ஏனைய நாடுகளுடன் உறவுகளை வலுப்படுத்தி எமது இலக்குகளை அடைவதற்குமான சந்தர்ப்பம் இன்னமும்  கைநழுவிப்போகவில்லை.  எம்மை சூழ்ந்து நிற்கும் ஆபத்துக்களை உடைத்தெறிவதற்கு இலட்சியத்தில் உறுதியாக உள்ள அனைவரும் ஒரு குடையின்கீழ் அணிதிரள்வதற்கு எமது விடுதலைப் பயணத்திற்காகதமது இன்னுயிர்களை ஈந்தவர்களுக்காக கடமைப்பட்டுள்ளனர்.