செய்திகள்

திருப்பதி வனப்பகுதியில் தமிழர்கள் கொல்லப்பட்டதை நேரில் பார்த்த சாட்சிகள்: வைகோ திடுக்கிடும் தகவல்

திருப்பதி வனப்பகுதியில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை நேரில் பார்த்த மேலும் 3 சாட்சிகள் இருப்பதாகவும், அவர்களது உயிருக்கு ஆபத்து இருப்பதால் வெளியே வர பயப்படுகின்றனர் என்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

மக்கள் கண்காணிப்பகம் மற்றும் மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்கம் சார்பில் சித்ரவதையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஐ.நா.வின் ஆதரவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் ஆந்திர மாநிலத்தில் சுட்டுக் கொல்லப் பட்ட தமிழக தொழிலாளர்கள் குடும்பத்துக்கு ஆதரவு மற்றும் பாதுகாப்பு உறுதியேற்பு பொதுக்கூட்டம் திருவண்ணா மலை மாவட்டம் போளூரில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. மாவட்ட ஆலோசகர் நடராசன் தலைமை வகித்தார்.

பொதுக்கூட்டத்தை தொடங்கி வைத்து ஆலோசகர் ஹென்றி திபேன் பேசும்போது, “சுட்டுக் கொல்லப்பட்ட 20 தமிழக தொழிலாளர்களுக்கு ரூ.3 லட்சம் வழங்கிவிட்டதால், தனது பொறுப் பில் இருந்து தமிழக அரசு விலகக் கூடாது. நீதி கிடைக்கும் வரை இணைந்து போராட வேண்டும். ஆந்திர முதல்வர் உட்பட அனை வருக்கும் தண்டனை பெற்றுத் தர வேண்டும்’’ என்றார்.

இயக்குநர் கவுதமன் பேசும் போது, “20 தமிழர்கள் சுட்டு கொல்லப்பட்ட வழக்கை சிபிஐ விசார ணைக்கு உத்தரவிட வேண்டும். அதற்கான முயற்சிகளை தமிழக அரசு எடுக்க வேண்டுமே தவிர, சமரசம் செய்துகொள்ள கூடாது. முதல்வர் நடவடிக்கை எடுக்க வில்லை என்றால், உங்களுக்கு எதிரான அலை சட்டமன்ற தேர்த லில் எதிரொலிக்கும்” என்றார்.

ஆம்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் அஸ்லம்பாஷா பேசும்போது, “சுட்டுக் கொல்லப்பட் ஒவ்வொரு குடும்பத்துக்கும் அரசு வேலை வழங்க வேண்டும்” என்றார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசும்போது, “தேசிய மனித உரிமை ஆணையத்தில் 3 சாட்சிகளின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதுபோல், நீதிபதி முன்பு பதிவு செய்ய வேண்டும். இதையும் தாண்டி யாரையும் சுடுவோம் என்று ஆந்திர அமைச்சர் மற்றும் டிஜிபி கூறியிருப்பதால், அவர்களது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இவ்வளவு நடந்த பிறகும் முதல்வர் மவுனமாக இருப்பது வேதனை அளிக்கிறது.

சம்பவத்தை நேரில் பார்த்த, மேலும் 3 சாட்சிகள் உள்ளனர். உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் வெளியே வர பயப்படுகின்றனர். திருவண்ணாமலை மற் றும் ஆந்திர மாநிலத்தில் நடந்த பிரேதப் பரிசோதனை அறிக்கையை வெளியிட வேண் டும். அதை 20 பேர் குடும்பத்துக்கு வழங்க வேண்டும். அதேபோல், தனித்தனியாக 20 கொலை வழக்குகளை பதிவு செய்ய வேண்டும்’’ என்றார்.