செய்திகள்

திருமணத்தின் பின் பெண்ணின் மீது உத்தரவுகளை ஆண் திணிக்க முடியாது! எம்.ஏ.அஸீஸ் பேச்சு (படங்கள்)

மிருகங்களில் ஆண்மிருகங்களை உயர்வாக கருதப்படுகின்றது. ஆனால் மனித குலத்தில் உயர்வாக பெண்களுக்கே உயர்வான இடம் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் எம்.ஏ.அஸீஸ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நீதிமன்றத்தின் கட்டளைகளுக்கு அமைவாக சிறு குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று காலை மட்டக்களப்பு இந்துக்கல்லூரி ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு சமுதாய சீர்திருத்த திணைக்களமும், தேவை நாடும் மகளிர் அமைப்பும் இணைந்து இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது.

சமுதாய சீர்திருத்த உத்தியோகத்தர் எஸ்.தயானந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் எம்.ஏ.அஸீஸ், தேவை நாடும் மகளிர் அமைப்பின் சட்ட ஆலோசகர் திருமதி அருள்வாணி சுதர்சன்,அந்த அமைப்பின் வளவாளர் திருமதி ப.பிரதீபா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் மற்றும் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றங்களின் ஆலோசனையின் கீழ் சிறு குற்றங்களில் தண்டனைபெற்றவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

சமூகத்தில் குற்றங்களை கட்டுப்படுத்தி குடும்ப ஒற்றுமையினையும் பிணைப்பினையும் ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்வு ஒழுங்குபடுத்தப்பட்டதாக சமுதாய சீர்திருத்த உத்தியோகத்தர் எஸ்.தயானந்தன் தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் எம்.ஏ.அஸீஸ்,

பெண்களை அடித்து துன்புறுத்துவது குற்றவியல் சட்டமாகும். அதன்மூலம் குற்றவாளியாக கருதப்படும் ஒருவருக்கு சிறைத் தண்டனையும் வழங்கப்படும்.

உலகில் சிறப்பான இடம் பெண்களுக்கு வழங்கப்படுகின்றது. மிருகங்களில் ஆண்மிருகங்கள் அதிகளவு உயர்வாக மதிக்கப்படுகின்றது. ஆனால் மனித குலத்தில் அதிகளவில் பெண்களுக்கு சிறப்பான இடம் வழங்கப்படுகின்றது.

திருமணத்தின் பின்னர் ஒரு பெண்ணின் முழுப்பொறுப்பினையும் அந்த ஆணே ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் பெண்ணின் மீது உத்தரவுகளை அவர் திணிக்க முடியாது.

பெண்களை ஏசுவது அவர்களை இழிவுபடுத்துவதாகவே கருதப்படுகின்றது.1978ஆம் ஆண்டு அரசியல் யாப்பின் 03ஆம் பிரிவின் படி பெண்ணின் அடிப்படை உரிமை மீறலாக கருதப்பட்டு வழக்குத் தொடர முடியும்.

இந்த நாட்டில் இரண்டு சட்ட நடைமுறைகள் உள்ளன.குற்றவியல் சட்டம்,சிவில் சட்டம். ஒரு பெண்ணை அடித்து துன்புறுத்தும் சம்பவமானது குற்றவியல் சட்டமாகும். இதன்மூலம் ஒருவருக்கு குறைந்தது ஏழு வருடங்கள் சிறைத் தண்டனை விதிக்க முடியும்.

குடும்பத்தில் கருத்து முரண்பாடுகள் ஏற்படும்போது அது தொடர்பில் வழக்குத் தொடர முடியாது. ஆனால் அவற்றினை இணக்க சபைக்கு செல்வதன் மூலம் தீர்த்துக் கொள்ள முடியும்.

ஆண்கள் குறுக்குவழிகளினால் பணம் சம்பாதிக்க முனையும்போது அவற்றினால் பாதிக்கப்படுவது அந்த குடும்பமும் அதில் உள்ள பெண்களுமாகும். அதேபோன்று பெண்களும் மட்டுப்படுத்தப்பட்ட ஆசைகளைக் கொண்டிருக்க வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் தேவை நாடும் மகளிர் அமைப்புக்கு வரும் வன்முறைகள் தொடர்பான புகார்களில் 70வீ தமான புகார் பெண்களினாலேயே முன்வைக்கப்படுகின்றது. புரிந்துணர்வு என்பது கணவன் மனைவி இருவரிடமும் இருக்க வேண்டும்.

அதிகளான போதைபாவனையே வீட்டு வன்முறைக்கான காரணமாக அதிகளவில் பதிவு செய்யப்படுகின்றன. மதுபாவனையை கட்டுப்படுத்தி குடும்பத்துடன் ஒன்றித்து செல்வதன் மூலமே ஒரு இன்பமான குடும்பத்தினை கட்டியெழுப்ப முடியும்.

சமூகத்தின் கௌரவமான வாழ்வினை நாங்கள் எதிர்நோக்கமாக இருந்தால் எமது நடத்தையினை அதற்கேற்றாற் போல் கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு இருவருக்கும் உள்ளது. கணவன், மனைவிக்கு இடையே புரிந்துணர்வு இருக்க வேண்டும்.

a1

a2

a3

a4