செய்திகள்

திருமலை கடற்படை முகாமில் ‘கோத்தா பேஸ்’ இருக்கவில்லை: முன்னாள் கடற்படைத் தளபதி

திருகோணமலை கடற்படை முகாமில் ‘கோத்தா பேஸ்’ என்ற பெயரில் எவ்வித முகாமும் தான் கடற்படையில் சேவையாற்றிய காலப்பகுதியில் இருக்கவில்லையென்றும் கடற்படையினருக்குச் சேறு பூசும் நோக்கில் பொய்ப் பிரசாரம் செய்யப்படுவதாகவும் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதில் கடற்படையினர் முக்கிய பங்காற்றினர். ஆயிரக்கணக்கான கிலோ மீற்றர் தூரம் சென்று புலிகளின் கப்பல்களை அழித்து தமது சக்திக்கு மீறி பணிகளை செய்த கடற்படையினர்மீது சேறு பூசுவதைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாதென அவர் சிங்கள ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;

கடற்படையினரின் செயற்பாடுகள் குறித்து நான் மிகவும் அவதானமாகவே இருந்தேன். அக்காலப்பகுதியிலே எனது பாதுகாப்பு பிரிவில் பணிபுரிந்த சம்பத் முனசிங்க( நேவி சம்பத்) ஐந்து பிள்ளைகளை கடத்தி வந்து கப்பம் பெறுவதாக தகவல் கிடைத்திருந்தது. அத்தகவலைத் தொடர்ந்து அவ்வதிகாரிக்கு எதிராக விசாரணை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது. விசாரணை இடம்பெற்றுக் கொண்டிருக்கும்போதே நேவி சம்பத் கடற்படையில் இருந்து தப்பித்துச் சென்று விட்டார். அவரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அவ்விடயம் தொடர்பில் நானே பொலிஸ் மா அதிபரிடம் முதன் முறையாக முறைப்பாடு செய்தேன். குற்றப்புலனாய்வுப் பிரிவினர், கடற்படையின் சட்டப் பிரிவிற்கும் இவ்விடயம் தொடர்பில் தெரியப்படுத்தி இருந்தேன். அவர் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிடமே இருந்துள்ளார். அதன்பிறகு சரத் பொன்சேகா குற்றப்புலனாய்வு பிரிவிடம் ஒப்படைத்துள்ளார்.

முன்னாள் இராணுவத் தளபதிக்கும் எனக்கும் இடையே முரண்பாடு இருந்தமை யாவரும் அறிந்த விடயம். என்னால் எழுதப்பட்ட புத்தகமொன்றிலும் இவ்விடயம் தொடர்பில் குறிப்பிட்டுள்ளேன். சரத் பொன்சேகா கூறியே நேவி சம்பத் எங்களுக்கு எதிராக குற்றம் சுமத்தியுள்ளார். 2009 ஆம் ஆண்டு இவ்விடயம் தொடர்பில் முறைப்பாடு செய்தபோது குற்றப்புலனாய்வுப் பிரிவினர் இரண்டு வருடம் விசாரணை செய்து 2011 இல் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பித்திருந்தனர்.

கடத்திச் சென்ற குற்றச்சாட்டில் சம்பத் முனசிங்க (நேவி சம்பத்) குற்றவாளியென ஒப்புவிக்கப்பட்டிருந்தது. அவ்வாறு இருக்கும் போது முன்னாள் கடற்படை ஊடகப் பேச்சாளர் கெப்டன் டி.பீ.கே.தசநாயக்கவுக்கு இச்சம்பவத்துடன் தொடர்பு இருப்பதாகக் கூறியிருப்பது எதற்கென புரியவில்லை. அக்காலப்பகுதியில் அவர் ஊடகப் பேச்சாளராகவும் கடற்படை நடவடிக்கை பிரிவின் பிரதிப் பணிப்பாளராகவும் செயற்பட்டார்.

இவ்வாறு மோசடிகள் இடம்பெறுவதற்கான வாய்ப்பு கடற்படையில் இருக்கவில்லை. கடற்படையினர்மீது அபகீர்த்தியை ஏற்படுத்துவதற்கு யாருக்கும் இடமளிக்கப் போவதில்லை என்றார்.