செய்திகள்

“திரு பிரபாகரன்” என நல்லூரில் கூறியது ஏன்? மகிந்தவின் சீற்றமும் சந்திரிகாவின் விளக்கமும்

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனை தான் ‘திரு பிரபாகரன்’ எனக் குறிப்பிட்டது மரியாதைக்காகவல்ல. கேலியாகவே அவ்வாறு குறிப்பிட்டேன் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்திருக்கின்றார்.

யாழ்ப்பாணம் நல்லுரில் நடந்த ஜனாதிபதி தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றிய சந்திரிகா குமாரதுங்க, விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனை, “திரு.பிரபாகரன்” (மிஸ்டர் பிரபாகரன்) என்று குறிப்பிட்டமை அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றது.

கடந்த 30ம் நாள், யாழ்ப்பாணத்தில் எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து நடத்திய பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றிய போதே, சந்திரிகா குமாரதுங்க, தாம் விடுதலைப் புலிகளின் தலைவர் திரு.பிரபாகரனுடன் பேச்சு நடத்த முயன்றதாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

திரு பிரபாகரன் என சந்திரிகா குறிப்பிட்டபோது அங்கு குழுமியிருந்த மக்கள் பெரும் ஆரவாரம் செய்தார்கள். அவரது உரை தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட போதும் அந்த மகிழ்ச்சி ஆரவாரத்தைக் காண முடிந்தது.

இதுகுறித்து, இரு தினங்களுக்கு முன்னர் அரச தொலைக்காட்சி பேட்டி ஒன்றில், பாதுகாப்புச்  செயலர் கோத்தாபய ராஜபக்ச கடுமையாக விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.

தீவிரவாதியான பிரபாகரனை மரியாதையோடு, திரு.பிரபாகரன் என்று சந்திரிகா கூறியிருப்பதாகவும், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை, சாதாரணமாக, மகிந்த ராஜபக்ஷ என்றே குறிப்பிட்டதாகவும், அவர் அதிருப்தியை வெளியிட்டிருந்தார்.

சந்திரிகாவின் இந்த சர்ச்சைக்குரிய உரை, நேற்று அரசதரப்பின் பிரச்சார மேடைகள் அனைத்திலும், முக்கிய இடத்தைப் பெற்றிருந்தது. சிங்கள மக்களின் வாக்குகளைக் கவர்வதற்கு இதனைப் பெரிதுபடுத்தும் முயற்சயில் அரச தரப்பினர் இறங்கியிருந்தமையை காண முடிந்தது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தொடக்கம், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும், திரு.பிரபாகரன் விவகாரத்தை வைத்து, சந்திரிகா குமாரதுங்கவையும், எதிரணியினரையும், கடுமையாகத் தாக்கி விமர்சனங்களைச் செய்தனர்.

கண்டியில் நேற்று நடந்த பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றிய, மகிந்த ராஜபக்ஷ, சந்திரிகாவின் இந்த உரைக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். தன்னை மரியாதையோடு அழைக்காமல் வெறுமனே மகிந்த ராஜபக்ஷ என்று குறிப்பிட்டதாகவும், ஆனால் புலிகளின் தலைவர் பிரபாகரனை மரியாதையாக, திரு.பிரபாகரன் என்று கூறியதாகவும், அவர் விசனத்தை வெளியிட்டார்.

இந்த விவகாரம் சர்ச்சையை உருவாக்கியிருக்கும் நிலையில், சந்திரிகா குமாரதுங்கவும் இதற்குப் பதிலளிக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்.  பிரபாகரனை கேலியாகவே திரு பிரபாகரன் என தான் குறிப்பிட்டதாக நேற்று கொழும்பிலுள்ள தன்னுடைய இல்லத்தில் கூட்டிய செய்தியாளர் மாநாட்டில் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்தார்.