செய்திகள்

தீர்வுகாண அரசியல் விருப்பம் உண்டு என்ற மங்களவின் கருத்துக்கு ஈ.பி.டி.பி வரவேற்ப்பு

இலங்கையில் தேசிய நல்லிணக்கம் ஏற்படுத்தப்படாததற்கும். தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு உரிய தீர்வுகாணப்படாமைக்கும் கடந்த காலங்களில் தென் இலங்கையில் ஆட்சிக்கு வந்த அரசியல் தலைமைகளின் அரசியல் விருப்பமின்மையே காரணமாக இருந்தது என்றும் இப்போது அந்த அரசியல் விருப்பம் இருக்கின்றது ஆகவே இனங்களுக்கிடையே தேசிய நல்லிணக்கமும், அரசியல் பிரச்சினைக்கு தீர்வும் காணப்படும் என்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அவர்கள் இந்தியாவில் கூறியிருக்கும் கருத்துக்கள் தமிழ் மக்களிடையே புதிய நம்பிக்கையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

இவ்வாறு ஈ.பி.டி.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அமைச்சர் மங்கள சமரவீர அவர்கள் வெளிப்படையாக கூறியிருக்கும் தமிழ் மக்கள் தொடர்பான கருத்துக்கள் ஈழமக்கள் ஜனநாயகக்கட்சியின் நீண்டகால அரசியல் முயற்சிகளுக்கு கிடைத்திருக்கும் வெற்றியாகவே பார்க்கமுடிகின்றது. அதற்காக எமது மக்களின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அமைச்சர் மங்கள சமரவீர இந்தியாவுக்கான விஜயத்தின்போது வடக்கிலிருந்து படைக்குறைப்பு நடைபெறும்  என்றும், யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமும், நீதியும் வழங்கப்படும் என்றும், புலம் பெயர்ந்துவாழும் எமது தாயக உறவுகளுடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படும் என்றும் கூறிய கருத்துக்கள் எமக்கு மகிழ்ச்சியளிக்கின்றன.

எனவே இந்த விடயங்கள் தமிழ் மக்களின் முன்னுரிமைக்குரிய கோரிக்கைகளாக முன்னைய அரசுகளிடமும், தற்போதைய புதிய அரசிடமும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியினால் முன்வைக்கப்பட்டவையாகும். எமது மக்களின் கோரிக்கைகளுக்கு மதிப்பளிக்கும் விதமாக இவ்வாறான முன்னெடுப்புக்களை நாம் ஒத்துழைப்போடு வரவேற்கின்றோம்.