செய்திகள்

தீவகத்தில் சட்ட விரோத செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கைகள் எடுங்கள்:பொலிஸாருக்கு உத்தரவிட்ட இளஞ்செழியன்

தீவகப் பகுதிகளில் இடம்பெறும் மணல்,மரம்,விலங்குகள் கடத்தல்கள்,வன்செயல்கள் உள்ளிட்ட சட்ட விரோதச் செயற்டபாடுகளைக் கஷட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுங்கள்.  இவ்வாறு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் பொலிஸாருக்க உத்தரவிட்டுள்ளார்.

யாழ்.மேல் நீதிமன்றத்தில் நேற்று 24 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பிணை மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை ஒன்றின் போதே ஊர்காவற்துறை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்,ஊர்காவற்துறைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆகியோருக்கு மேற்கண்டவாறு கண்டிப்பான உத்தரவிட்டுள்ளார்.அவர் தனது உத்தரவில் மேலும் தெரிவித்ததாவது,

தீவகப் பகுதிகளில் இடம்பெறும் வன்செயல்கள் கட்டுப்படுத்தப்பட்டுச் சட்ட விரோதமான குற்றம் புரிபவர்கள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும்.வேலணை,சாட்டி,மண்கும்பான்,அல்லைப்பிட்டி போன்ற கடற்கரையோரப் பிரதேசங்களில் இடம்பெறும் சட்ட விரோதமான மண்கடத்தல்களில் ஈடுபடுபவர்கள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும்.மண் கடத்தல்களில் ஈடுபடும் டிப்பர்,லொறி,உழவு இயந்திரம்,மாட்டு வண்டி,லான்ட்மாஸ்ரர் போன்ற வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அரச உடைமைகள் ஆக்கப்பட வேண்டும்.

இரவு வேளைகளில் தீவகத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்குக் கால்நடைகள் கடத்திச் செல்லப்படுவது உடனடியாக முறியடிக்கப்பட வேண்டும்.அவற்றைக் கடத்திச் செல்லும் வாகனங்களும் சட்ட ரீதியாக அரசுடமை ஆக்கப்பட வேண்டும்.

வேலணை,ஊர்காவற்துறை,காரைநகர் போன்ற பிரதேச செயலர்களுடன் நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்தி மண்,மிருகங்கள்,மரம் என்பவை கடத்தப்படுவதைத் தடுப்பதற்கு நிர்வாக ரீதியில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.ஊர்காவற்துறை,நாரந்தணை,தம்பாட்டி,வேலணை,அல்லைப் பிட்டி,மண்கும்பான்,மண்டைதீவு போன்ற பகுதிகளில் பொலிஸ் ரோந்து நடவடிக்கைளில் ஈடுபட்டு குற்றங்கள் உடனடியாகக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும்.அத்துடன் அப்பகுதிகளில் மக்கள் விழிப்புக் குழுக்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி பொலிஸாரை மேலும் அறிவுறுத்தியுள்ளார்.