செய்திகள்

துன்பங்களில் இருந்து மீண்டெழுவதற்குக் கலை வெளிப்பாடுகள் துணை நிற்கும்: கல்விப் பணிப்பாளர்

கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாகப் பல்வேறு துன்பங்களையும், இடப்பெயர்வுகளையும்,அரசியல்,பொருளாதாரம்,வாழ்வியல் என்பவற்றில் மிகவும் சிக்கலான சூழ்நிலைகளையும் எதிர்கொண்ட எமது சமூகம் மீண்டெழுவதற்கு எம்மவர்களின் கலை வெளிப்பாடுகள் துணை நிற்கும் எனத் தெரிவித்தார் வடக்கு மாகாண மேலதிகக் கல்விப் பணிப்பாளர் திருமதி.பிறேமாவதி செல்வின்.

தனு ஆட் சித்திரக் கூடத்தின் ‘சின்னச் சின்னக் கைகள் சித்திரக் கண்காட்சி’ அண்மையில் திருநெல்வேலி இந்து வாலிபர் சங்க மண்டபத்தில் இடம்பெற்ற போது பிரதமவிருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், கலைகள் ஒரு மனிதனுடைய சுயதிறனையும்,ஆளுமையையும் வளர்க்கும் என்கின்ற வகையில் பாடவிதானத்திலே இந்த ஆற்றுகைக் கலைகள்,அழகியற் கலைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கின்றன.அந்த வகையிலும் ஆரம்பக் கல்வியிலும்,இடை நிலைக் கல்வியிலும் அழகியற் கலைகள் ஒரு பாடமாகவும் கற்பிக்கப்படுகின்றன.கலைகளைப் பயில்வது தொடர்பாக எம் மத்தியில் பல்வேறு வாதப் பிரதிவாதங்கள் காணப்படுகின்றன.

கலைகள் கலைகளுக்காக என்று கூறுபவர்கள் ஒருபுறம்.கலைகள் மக்களின் பொழுது போக்கிற்காக என்று கூறுபவர்கள் மறுபுறமென்று காலம் காலமாக இவ்வாறான விவாதங்கள் தொடர்ந்து கொண்டு தானிருக்கின்றன.

கலைகளைத் தங்களின் ஆத்மார்த்த உயிர்த் துடிப்புடன் பயில்பவர்கள்,கலைகளைத் தங்களுடைய மனச் சாந்திக்காகப் பயில்பவர்கள்,கலைகளைத் தங்களது வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்பவர்கள் எனப் பல்வேறு வகையானவர்கள் எம்மத்தியில் காணப்படுகின்றனர்.

வெறுமனே கோடுகளையும்,கோலங்களையும் மாத்திரம் நாங்கள் கலைகள் என்று கூறுவதில்லை.ஒரு பென்சிலும்,தூரிகையும் இருந்து விட்டால் மாத்திரம் ஒருவனால் கலைப் படைப்புக்களைப் படைத்து விட முடியாது.ஒருவனுக்குக் கோடுகளாகத் தெரியும் ஒரு விடயம் ஒரு கலைஞனுக்குப் பெரும் கலைப் படைப்பாகத் தோற்றமளிக்கும்.சுய சிந்தனையும்,ஆளுமைத் திறனும்,கற்பனை ஆற்றலும் கொண்டவர்களால் மாத்திரமே கலைப் படைப்புக்களை முழுமையாக விளங்கிக் கொள்ள முடியும்.

கலைப் படைப்புக்கள் மீதான ஆர்வம் பிள்ளைகளின் ஆற்றலின் வெளிப்பாடாக மாத்திரம் அமைந்து விடுவதில்லை.அதற்கப்பால் பல விடயங்கள் இதிலே அடங்கியுள்ளன.சிறு வயதிலே சித்திரக் கலையின் மீது ஆர்வம் கொண்டு வரைகின்ற போது அது தொடர்பான கற்பனை ஆற்றலையும்,தேடலையும் வளர்த்துக் கொள்ள முடிகிறது.சித்திரத்தை வரைகின்ற போது ஒரு பிள்ளை தான் நினைத்ததை வெளிப்படுத்த முடியும் என்ற உணர்வைப் பெறுகிறது.இதன் மூலம் தன்னம்பிக்கை உணர்வும்,ஆளுமைத் திறனும் அந்தப் பிள்ளையிடம் கட்டியெழுப்பப்படுகிறது எனவும் கூறினார். யாழ்.நகர் நிருபர்-

IMG_4188 IMG_4194