செய்திகள்

துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் பூகம்பம்: பலி 16 ஆயிரத்தை தாண்டியது – தம்பிக்கு கவசமான தமக்கை

துருக்கி மற்றும் சிரியாவில் பூகம்ப பாதிப்பால் பலி எண்ணிக்கை 15 ஆயிரத்தைக் கடந்துவிட்டது. இந்நிலையில் சிரியாவில் மீட்புப் பணிகளின் போது இடிபாடுகளுக்கு இடையே இருந்து ஒரு சிறுமியும் அவரது சகோதரரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். அந்த சிறுமியின் வீடியோ உலகம் முழுவதும் வைரலான நிலையில் அதனைப் பகிர்ந்த உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ரோஸ் அதோனம் சிறுமியை வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

சுமார் 17 மணி நேரமாக இவர்கள் கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருந்தனர். அதன்பின்பு இவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். வீடியோவில் அச்சிறுமி ஏதோ பேசுகிறார். அதனைப் பகிர்ந்துள்ள டெட்ரோஸ் அதோனம், “இந்த துணிச்சலான சிறுமிக்கு எல்லையில்லா பாராட்டு” என்று பதிவிட்டுள்ளார்.

இந்த போட்டோவை ஐ.நா பிரதிநிதி முகமது சபா பகிர்ந்து “இந்த 7 வயது சிறுமி இடிபாடுகளுக்கு இடையே தன் தம்பியுடன் 17 மணி நேரம் சிக்கிக் கொண்டார். தம்பியின் தலையில் கையை வைத்து காப்பாற்றிய இந்த சிறுமியின் புகைப்படத்தை அதிகம் பகிருங்கள். நேர்மறையான சிந்தனைகளை ஊக்குவியுங்கள்” என்று பதிவிட்டிருந்தார்.(15)