செய்திகள்

துரையப்பா அரங்கில் நடந்த மோதல்: டக்ளஸின் தம்பி மீது நீலப்படையணி தாக்குதல்

ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் பிரசாரக் கூட்டம் இன்று நண்பகல் யாழ். துரையப்பா விளையாட்டு அரங்கில் ஆரம்பமாகவிருந்த வேளையில் ஈ.பி.டி.பி. தலைவர் டக்ளஸ் தேவானந்தாவின் சகோதரர் தயானந்தாவுக்கும் சுதந்திரக் கட்சி அமைப்பாளர் அங்கஜன் இராமநாதன் தலைமைலிலான நீலப் படையணியினருக்கும் இடையில் இடம்பெற்ற வாக்குவாதம் மோதலாக வெடித்தது. இதன் போது தயானந்தா மீது நீலப் படையணியினர் கடும் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ உரையாற்றவிருந்த மேடைக்கு அருகிலேயே இச்சம்பவம் இடம்பெற்றது. ஜனாதிபதி வருகைதருவதற்கு சுமார் 15 நிமிடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற இச்சம்பவத்தில் அமைச்சர் டக்ளஸின் சகோதரரும் அவரது பிரத்தியேகச் செயலாளருமான தயானந்தா கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார்.

மேடைக்கு அருகில் நீலப் படையணியைச் சேர்ந்தவர்கள் நீல நில ரீ சோட்டுக்களுடன் நின்றதாகவும், அவர்களை அங்கிருந்து அகன்று செல்லுமாறு தயானந்த வலியுறுத்தியதாகவும் சொல்லப்படுகின்றது. அதனை அவர்கள் ஏற்கமறுத்த போது அவர்களின் ரீ சேர்ட்டை அகற்றுதற்கு தயானந்த முற்பட்ட போதே மோதல் இடம்பெற்றது. அந்த இடத்திலிருந்து வெளியேற மறுத்த அவர்கள், தயானந்தாவை கடுமையாகத் தாக்கியுள்ளார்கள்.

3அருகேயிருந்த பொலிஸாரும் ஏனையவர்களும் தலையிட்டே நிலைமைகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.  இது தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகின்றது. வடமாகாண சபையின் கூட்டத்திலும் அண்மையில் இடம்பெற்ற மோதலுக்கு தயானந்தாவே காரணமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தக் கூட்டத்துக்கு ஈ.பி.டி.யினரும் அங்கஜன் குழுவினரும் போட்டிபோட்டுக்கொண்டு அரச பஸ் வண்டிகளில் பெருந்தொகையானவர்களைக் கொண்டுவந்திருந்தார்கள்.