செய்திகள்

தூதர்கள் சென்ற ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியதை ஒத்துக் கொண்ட தலிபான்கள்

பாகிஸ்தானில் வெளிநாட்டு பயணிகளை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியது நாங்கள் தான் என பாகிஸ்தான் தாலிபான்கள் அறிவித்துள்ளனர். இவ்விபத்தில் நார்வே மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் தூதர்கள் உள்பட 6 பேர் பலியாகினர்.

பிரதமர் நவாஸ் ஷெரீப் பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக பல்வேறு வெளிநாட்டு தூதர்கள் உள்ளிட்ட 11 பேரும், பாகிஸ்தானை சேர்ந்த 6 பேரும் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் கில்கிட்-பால்டிஸ்தான் பிராந்தியத்துக்கு இன்று அழைத்து செல்லப்பட்டனர். இந்த ஹெலிகாப்டர் நல்தார் பள்ளத்தாக்கில் உள்ள ஒரு பள்ளி கட்டிடம் மீது விழுந்து தீப்பிடித்ததாக கூறப்பட்டது.

இதில் நார்வே தூதர் லெயிப் எக் லார்சன், பிலிப்பைன்ஸ் தூதர் டொமினிக்கோ டி லுசனாரியோ ஆகியோர், மலேசியா மற்றும் இந்தோனேசிய தூதர்களின் மனைவிமார்கள், 2 பைலட்டுகள் என 6 பேர் பலியாகினர். போலந்து மற்றும் நெதர்லாந்து தூதர்கள் படுகாயம் அடைந்தனர்.

தூதர்கள் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக கூறப்பட்ட நிலையில், தற்போது விமான எதிர்ப்பு ஏவுகணை மூலம் தாங்கள் தான் அந்த ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியதாக தாலிபான் இயக்கம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.