செய்திகள்

தென்னாபிரிக்காவின் கனவினை சிதறடித்த நியுசிலாந்து அணி – அரையிறுதியில் அபார வெற்றி

2015 உலககிண்ணத்தின் முதலாவது அரையிறுதியாட்டத்தில் ஓரு பந்து மீதமிருக்கையில் நான்கு விக்கெட்களால் வெற்றிபெற்று நியுசிலாந்து அணி தென்னாபிரிக்காவின் கனவுகளை சிதைத்து இறுதியாட்டத்திற்குள் நுழைந்துள்ளது.

மழை குறுக்கிட்ட இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 43 ஓவர்களில் 5 விக்கட்டுக்களை இழந்து 281 ஓட்டங்களை பெற்றது. அணி சார்பில் டுபிளேசி,82 ஓட்டங்களையும்,அணித்தலைவர் டிவில்லியர்ஸ் 65 ஓட்டங்களையும், மில்லர் 18 பந்துகளில் 49 ஓட்டங்களையும் பெற்றனர்.

டக்வேர்த் முறையின் மூலமாக 43 ஓவர்களில் வெற்றி பெறுவதற்காக 298 ஓட்டங்களை பெற வேண்டிய நிலையில் துடுப்பபெடுத்தாடிய நியுசிலாந்து அணிக்கு அபாரமான ஆரம்பத்தை வழங்கினார் மக்கலம், அவர் 26 பந்துகளில் 59 ஓட்டங்களை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

பின்னர் நான்காவது விக்கெட்டிற்கு இணைந்த எலியட், ஆன்டெர்சன் ஜோடி பெற்ற 103 ஓட்டங்கள் அணியை பலப்படுத்தின
ஆன்டாசன் 57 பந்துகளில் 58 ஓட்டங்களை பெற்றார்,இறுதிவரை ஆட்டமிழக்காமல் 84 ஓட்டங்களை பெற்ற 36 வயது எலியட் வெற்றிபெறுவதற்கு இரு பந்துகளில் 5 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் ஸ்டெயினின் பந்தை சிக்சர் அடித்து அணியை இறுதிப்போட்டிக்குள் அழைத்துசென்றார்.