செய்திகள்

தேசியக்கொடியைப் பயன்படுத்துவது தொடர்பில் புதிய சட்டமூலம்: அமைச்சரவை அங்கீகாரம்

தேசியக் கொடியை பயன்படுத்துவது தொடர்பான புதிய சட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கமைய இதுவரை காலமும் தேசியக் கொடியை பயன்படுத்துவது தொடர்பில் நடைமுறையில் இருந்த விதிமுறைகள் சட்டமாக்கப்படவுள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜோசப் மைக்கள் பெரேரா தெரிவித்துள்ளார்.

தேசியக் கொடியை பயன்படுத்துவது தொடர்பான தெளிவுபடுத்தல்கள், பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் மற்றும் அதனை மீறினால் அனுபவிக்க நேரிடும் தண்டனைகள் தொடர்பான யோசனைத் திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

இதற்காக இலங்கைத் தர நிர்ணய நிறுவனத்தின் ஆலோசனைகளும் பெறப்படவுள்ளன. புதிய சட்ட நடைமுறையை விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அமைச்சர் ஜோசப் மைக்கள் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

சட்டம் அமுல்படுத்தப்பட்டதன் பின்னர் தேசியக் கொடியின் கௌரவத்திற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் அதனை தவறாக பயன்படுத்துவதற்கான சந்தர்ப்பம் முற்றாக தடுக்கப்படும் எனவும் அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.