செய்திகள்

தேசிய அரசில் இணைந்து மக்களுக்கு துரோகமிழைத்துள்ள சுதந்திரக் கட்சி: விமல் சீற்றம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டதன் மூலம், வாக்களித்த மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளனர் எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

பத்தரமுல்லவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என்ன செய்துள்ளார்? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் வாலாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஜனாதிபதி மாற்றியுள்ளார் எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

மைத்திரிபால சிறிசேன ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வாக்குகளைப் பெற்றுக்கொண்டு ஜனாதிபதியாகவில்லை என அவர் தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்க, ஆர்.சம்பந்தன், அனுரகுமார திஸாநாயக்க, சம்பிக்க ரணவக்க, ரவூப் ஹக்கீம் போன்றவர்களே ஜனாதிபதி மைத்திரிபாலவை ஆட்சி பீடத்தில் ஏற்றியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக ரணில் விக்ரமசிங்கவிற்கு வலுவான அரசாங்கமொன்றை அமைத்துக் கொடுக்கும் நோக்கில் ஜனாதிபதி இவ்வாறு சுதந்திரக் கட்சி உறுப்பினர்களை இணைத்துக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

நம்பிக்கையில்லா தீர்மானங்களின் மூலம் ஆட்சி கவிழ்க்க முடியாத அரசாங்கமொன்றை ரணிலுக்கு  அமைத்துக் கொடுப்பதே ஜனாதிபதியின் நோக்கமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.