செய்திகள்

தேசிய கீத விவகாரம் இந்நாட்டில் நமது அந்தஸ்து என்ன என்பதை காட்டுகிறது: மனோ கணேசன்

தமிழில் தேசிய கீதம் பாடப்படுவது தொடர்பாக, தேசிய நிறைவேற்று சபையில் நான் எழுப்பிய வினா, இன்று இந்நாட்டில் பாரிய வாதப்பிரதிவாதங்களை தேசியரீதியாக ஏற்படுத்தியுள்ளது. இது நன்மை தரும் தேசிய அறிகுறியாகும். இதன்மூலம் தமிழை தாய் மொழியாக கொண்டு இந்நாட்டில் வாழும் மக்களாகிய எங்களது தேசிய அந்தஸ்து என்ன என்பது அப்பட்டமாக வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

தமிழில் தேசிய கீதம் பாடி இந்நாட்டை நேசிக்கும் தமிழ் மக்களின் உரிமைக்காக முன்வந்து தேசிய நிறைவேற்று சபையிலும், பாராளுமன்றத்திலும், ஆதரவாக குரல் கொடுத்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சர்கள் ராஜித சேனாரத்ன, ரவுப் ஹக்கீம் மற்றும் எம்பீக்கள் டிலான் பெரேரா, வாசுதேவ நாணயக்கார, சுனில் ஹன்துன்நெத்தி, ஜோன் செனவிரட்ன, இரா. யோகராஜன் ஆகியோரின் கருத்துகள் பாராட்டுக்கு உரியவைகளாக இருக்கின்றன. இதன்மூலம் இனவாதத்தை கிளப்பி அரசியல் செய்ய விளையும் நபர்கள் தனிமைப்பட்டுள்ளார்கள் என தேசிய நிறைவேற்று சபை உறுப்பினரும், ஜனநாயக மக்கள் முன்னணி தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

நடப்பு அரசியல் நிலவரம் தொடர்பாக முன்னணியின் தலைமையகத்தில் நடைபெற்ற இளைஞர் இணைய வாராந்த கூட்டத்தில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
தமிழில் தேசிய கீதம் பாடப்படுவதற்கு அதிகாரபூர்வமற்ற தடை நாட்டின் பல பிரதேசங்களில் இருக்கின்றது. தமிழில் பாடக்கூடாது என்றும், சிங்களத்தில் மட்டுமே பாட வேண்டும் என்றும் தமிழ் பிரதேசங்களில் கட்டளைகள் இடப்பட்டுள்ளன. தமிழ் பாடசாலைகளில் தமிழில் தேசிய கீதம் பாடவைக்க முடியுமா என்பதில் அதிபர்களிடம் நிச்சயமற்ற நிலைப்பாடு இருக்கிறது. சட்டத்தில் எழுதப்பட்டுள்ள பல்வேறு உரிமைகள் தமிழ் பேசும் மக்களுக்கு மறுக்கப்பட்டுள்ளன. ஆகவே சட்டத்தில் உரிமை இருக்கின்றதல்லவா, என்று எவரும் நடைமுறையை மறந்துவிட்டு நாடகம் ஆட முடியாது. இதுபற்றிய வினா இன்று எழுந்ததும், தேசிய விவாதம் ஏற்பட்டுள்ளது. அதன்மூலம் நமது சட்ட அந்தஸ்த்து என்ன என்பது பற்றிய விளக்கம் எமக்கு கிடைக்கும். விவாதம் நடந்தால்தான் தீர்வு வரும்.

இனவாதிகள் எதிர்க்கின்றார்கள் என்பதற்காக பேசாமல் இருக்க முடியாது. அப்படியிருந்தால் இந்நாட்டில் எதுவும் செய்ய முடியாது. இந்த புதிய ஆட்சியை உருவாக்க பாடுபட்ட, எனக்கு எமது இனத்தின் சட்ட அந்தஸ்த்து இந்த ஆட்சியில் எப்படி இருக்கின்றது என்பதை தேடி தெரிந்து உறுதிப்படுத்தி கொள்ளும் தேவையும், உரிமையும் இருக்கின்றது. நான் கூலிக்கு மாறடித்து இந்த ஆட்சியை உருவாக்கவில்லை. வாயை மூடிக்கொண்டு சும்மா இருப்பதற்காக நான் தேசிய நிறைவேற்று சபையில் நியமனமும் பெறவில்லை.

இவ்விடயம் பற்றி, இன்றும் இனவாதிகள் என்ன சொல்கிறார்கள்? தமிழில் வேண்டுமானால் பாடுங்கள். ஆனால், தமிழ் தேசிய கீதத்துக்கு அரசியலமைப்பு அந்தஸ்து கிடையாது என்றும், சிங்கள மொழி தேசிய கீதத்துக்கு மட்டுமே அரசியலமைப்பு அந்தஸ்து இருக்கின்றது என்று சொல்கிறார்கள். இது உண்மையானால், அதை நாம், அரசியலமைப்புக்கு ஒரு திருத்தம் கொண்டு வருவதன் மூலம் மாற்றிட வேண்டும்.

நேற்று மாலை பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்திலும் இது பற்றி காரசாரமாக பேசப்பட்டுள்ளது. நான் அங்கு இன்று இல்லை. எனினும், நான் கிளப்பிய விவாதம் அங்கும், சிங்கள ஊடகங்களிலும் முன்னெடுக்கப்படுவது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். இன்று நண்பர்கள் டிலான் பெரேரா தங்கள் பக்கத்தில் இருக்கும் இனவாதிகளை இது தொடர்பில் கடுமையாக கண்டித்துள்ளார். தமது அரசாங்கம் கடந்த தேர்தலில் தோல்வியடைந்தது, பொதுபல சேனை போன்ற இனவாதிகளை பக்கத்தில் வைத்துக்கொண்டதால்தான் எனவும் அவர் கூறியுள்ளார். இது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி திருந்த விரும்புகிறது என்பதை காட்டுகிறது.

சுதந்திர கட்சியின் திகாமடுல்ல எம்பி சரத் வீரசேகர என்னை கடுமையாக பாராளுமன்றத்தில் சாடியுள்ளார். இந்தியாவில் தமிழ் தேசிய கீதத்தை உருவாக்க பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுக்க முடியுமா என எனக்கு இவர் சவால் விடுத்துள்ளார். நான் ஓர் இயங்கும் தேசிய கட்சித்தலைவர். இவரை போன்ற இனவாத முட்டாள்களுக்கு பதில் சொல்ல எனக்கு நேரமில்லை. இவருக்கு உரிய பதிலை அவரது கட்சியின் அதிகாரபூர்வ பேச்சாளர் டிலான் பெரேரா கூறிவிட்டார். டிலான் பெரேரா என்னையும் தமிழ் இனவாதியாக சாடியுள்ளார்.

எனினும் நேற்று மாலை என்னுடன் உரையாடி எனது நிலைப்பாட்டை பெற்று தெளிவுப்படுத்திக்கொண்டுள்ளார். தமிழ் எம்பீக்களில் இரா. யோகராஜன், இது தொடர்பில் உரையாற்றியுள்ளார். அமைச்சர் ரவுப் ஹக்கீமும் என்னுடன் சேர்ந்து இது தொடர்பில் தேசிய நிறைவேற்று சபையில் கருத்து தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சின் நிலைப்பாட்டை டிலான் பெரேரா தெளிவுபடுத்தியுள்ளார். ஜேவீபியின் நிலைப்பாட்டை சுனில் ஹன்டுன்நெத்தியும், இடதுசாரி ஜனநாயக முன்னணியின் நிலைப்பாட்டை வாசுதேவ நாணயக்காரவும் விளக்கியுள்ளனர். இவர்கள் அனைவரும் தமிழில் தேடிய கீதம் படும் உரிமையை ஆதரித்துள்ளனர். இது தொடர்பில் இதுவரையில் ஐக்கிய தேசிய கட்சி அமைதி காக்கின்றது. விரைவில் இந்த அமைதி களையும் என எதிர்பார்க்கின்றேன்.

தமிழ், முஸ்லிம் மக்களின் அரசியல், சமூக, கலாச்சார உரிமைகள் அனைத்தையும் எப்போதும் எதிர்த்து அரசியல் செய்து வரும், விமல் வீரவன்ச, தினேஷ் குணவர்த்தன, உதய கம்மன்பில மற்றும் பொதுபல சேனையின் ஞானசார தேரர் போன்றோர் தனிமைப்பட்டுள்ளார்கள். இவை இன்று இந்நாட்டில் யார் இனவாதிகள் என்பதையும், தமிழ் பேசும் மக்களின் அந்தஸ்து என்ன என்பதையும் கோடிட்டு காட்டுகின்றன.