செய்திகள்

தேசிய மலரை சரியான பெயரில் அழைக்க அமைச்சரவையில் தீர்மானம்

இலங்கையின் தேசிய மலரை தமிழில் ”நீலோற்பவம் ” என்றும் சிங்கள மொழியில் ”மானெல்” எனவும் ஆங்கில மொழியில் ”ப்ளூ வோட்டர் லிலி” (“Blue Water Lily”) எனவும் அழைக்கவும் அதன் சரியான உருவத்தை பயன்படுத்தவும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மகாவெலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று நடைபெற்ற அமைச்சரவைக்கூட்டத்தில் முன்வைத்த குறித்த முன்மொழிவுக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது பொதுமக்களின் ஆலோசனைகளை கருத்திற் கொண்டு அறிஞர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் அடங்கிய விசேட குழுவொன்றின் மூலம் இலங்கையின் தேசிய மலர் “நீலஅல்லி” என 1986 ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்டது.
குறித்த மலர் கடந்த காலங்களில் சரியான முறையில் பயன்படுத்தப்படாமையினால் ஏற்பட்டுள்ள நெருக்கடியினை அடிப்படையாக வைத்து தேசிய மலரின் விஞ்ஞான பெயர் Nymphaea stellata என்பதையும் அதன் சரியான உருவம் ஆகியவை தொடர்பில் போதுமான அளவு பிரச்சாரம் மேற்கொள்ளும் நோக்கில் இம்முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.