செய்திகள்

தேர்தலில் ஐ ம சு கூட்டமைப்பில் இ தொ கா இணைந்து போட்டி

பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் இணைந்து இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சி போட்டியிடவுள்ளது. இதை இ தொ கவின் துணைத் தலைவர் முத்து சிவலிங்கம் உறுதிப்படுத்தினார்.

கடந்த பத்தாண்டுகளாகவே தமது கட்சி அந்தக் கூட்டமைப்பில் அங்கம் வகித்து, இணைந்து போட்டியிட்டு, அமைச்சுப் பதவிகளை பெற்றுள்ளது என்றும் அது இந்தத் தேர்தலிலும் தொடரவுள்ளது எனவும் அவர் கூறினார்.

எனினும் கண்டி, பதுளை மற்றும் மாத்தளைப் பகுதிகளில் தனித்துப் போட்டியிடும் எண்ணமும் தங்களுக்கு உள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தேர்தலில் வெற்றி வாய்ப்புகளை மனதில் வைத்தே கூட்டமைப்புடன் இணைந்தும், சில இடங்களில் தனியாகப் போட்டியிடுவது என்றும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைமை யாரிடம் உள்ளது என்பதை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தரப்பும், இன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தரப்புமே முடிவு செய்ய வேண்டும் என்றும், இருதரப்பும் இணைந்து போட்டியிட வேண்டும் என இ தொ க அழுத்தமாகக் கூறியுள்ளது என்றும் முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.

மலையகப் பகுதியில் செயல்படும் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒரே தளத்தில் இணைந்து போட்டியிடுவது சாத்தியமற்றது எனவும் அவர் கூறினார்.