செய்திகள்

தேர்தலை குழப்ப முன்னாள் இராணுவத்தினர் சிலர் திட்டம்: இராஜதந்திரிகளிடம் ரணில்

எதிர்வரும் வியாழக்கிழமை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை குழப்பும் அல்லது தேர்தலில் மோசடிகளைச் செய்யும் முயற்சிகளில் முன்னாள் இராணுவ அதிகாரிகள் சிலர் ஈடுபட்டிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க குற்றஞ்சாட்டியிருக்கின்றார்.

கொழும்பு, கலதாரி ஹொட்டலில் இராஜதந்திரிகள் மத்தியில் இன்று வியாழக்கிழமை காலை உரையாற்றிய போதே இந்தக் குற்றச்சாட்டை ரணில் விக்கிரமசிங்க முன்வைத்தார். தற்போது கடமையிலுள்ள படையினருடன் இணைந்தே வடக்கு உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் இவ்வாறான குழப்ப நடவடிக்கைகயில் ஈடுபடுவதற்குத் திட்டமிடப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இவ்வாறான செயற்பட வேண்டாம் என தான் முன்னாள் இராணுவத்தினரிடம் கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்த ரணில் விக்கிரமசிங்க, அவ்வாறு செயற்படுவதற்கு அவர்கள் விரும்பினால் நீல வர்ண ரீ சேர்ட்டுக்களை அணிந்துகொண்டு பிரச்சாரத்தில் ஈடுபடுமாறு கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தை தேர்தல் ஆணையாளர் மற்றும் சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்களின் கவனத்துக்கு தான் கொண்டு செல்லப்போவதாகவும் ரணில் விக்கிரமசிங்க இராஜதந்திரிகளிடம் தெரிவித்தார்.