செய்திகள்

தேர்தல்முறை மாற்றம் தேவையில்லை பாராளுமன்றத்தைக் கலையுங்கள்: சோபித தேரர்

தேர்தல் முறை மாற்றம் அவசரமாக செய்யப்பட வேண்டிய விடயமல்ல. அதனைவிடுத்து உடனடியாக பாராளுமன்றத்தைக் கலைத்து தேர்தலை நடத்தவேண்டுமென சமூகநீதிக்கான மக்கள் இயக்கத்தின் மாதுலுவாவே சோபித தேரர் வலியுறுத்தியுள்ளார்.

20 ஆவது திருத்தம் தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியமையையடுத்து கடந்த வியாழக்கிழமை சிறுபான்மை மற்றும் சிறு கட்சிகள் கொழும்பில் கூடிப்பேசின. இதன்போது 20 ஆவது திருத்தத்திற்கு தமது கடும் எதிர்ப்பினை வெளியிட்டதுடன், இது தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சிவில் அமைப்பின் சார்பில் மாதுலுவாவே சோபித தேரரை சந்திப்பதென முடிவினை மேற்கொண்டன.

இதன் அடிப்படையில் சிறுபான்மைக் கட்சிகளின் பிரதிநிதிகள், நேற்று சனிக்கிழமை பிற்பகல் கோட்டே நாகவிகாரைக்குச் சென்று மாதுலுவாவே சோபித தேரரை சந்தித்தனர். சுமார் ஒரு மணிநேரம் நடைபெற்ற சந்திப்பையடுத்து மாதுலுவாவே சோபித தேரர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் இங்கு மேலும் தெரிவிக்கையில்;

“சிறுபான்மை மற்றும் சிறுகட்சிகள் உட்பட 57 அமைப்புகள் ஒன்றிணைந்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேனவையும் பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவையும் கொண்டுவந்தனர். இவ்வாறான நிலையில் அவர்களுக்குப் பாதகமான தேர்தல் முறை மாற்றத்தை உடன் வாபஸ்பெறவேண்டும்.

ஜனாதிபதி கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவது நல்ல விடயம். ஆனால் 20 ஆவது திருத்தத்தை அவசரமாகக் கொண்டுவந்தால் சமூகங்களுக்கு அநீதியை ஏற்படுத்தி மோசமான நிலையை உருவாக்கும். தேர்தல் முறைமாற்றம் அவசரமாக செய்யவேண்டிய விடயமல்ல. எனவே சிறுபான்மை மற்றும் சிறுகட்சிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் 20 ஆவது திருத்த வர்த்தமானி அறிவித்தலை வாபஸ்பெறவேண்டும்.அத்துடன் சிறுபான்மை கட்சிகளுக்கு ஏற்படும் பாதிப்பை தவிர்ப்பதற்கு இரட்டை வாக்குச் சீட்டு முறையை ஏற்படுத்தவேண்டும்.

இந்த அவசரமில்லாத தேர்தல் முறை மாற்றத்திற்கு முன்பாக 100 நாள் முடிந்துள்ளமையால் பாராளுமன்றத்தைக் கலைத்து தேர்தலை நடத்துமாறு நான் கோருகின்றேன். தேர்தலின் பின்னர் புதிய அரசாங்கம் மூலம் தேர்தல் முறை மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்றார்.

இதேவேளை சோபித தேரருடனான சந்திப்பின்போது சிறுபான்மை மற்றும் சிறுகட்சிப் பிரதிநிதிகள், தேர்தல் முறை மாற்றம் தொடர்பிலான யோசனைகளை முன்வைக்குமாறு ஜனாதிபதி கோரிய நிலையில் சுதந்திரக் கட்சியின் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதென குறிப்பிட்டனர்.

இதனால் எதிர்காலத்தில் இரண்டு கட்சி ஆட்சியே ஏற்படும். எனவே பாதிப்பை ஏற்படுத்த இரட்டை வாக்குச் சீட்டு அவசியமென தெளிவாக எடுத்துரைப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் வை.எல்.எஸ்.ஹமீட் தெரிவித்தார்.

இச்சந்திப்பில் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியுதீன், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத்சாலி, ஈ.பி.டி.பி.யின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா உட்பட மற்றும் பலர் கலந்துகொண்டனர்.