செய்திகள்

தோட்டத் தொழிலாளர்கள் பணிப் பகிஷ்கரிப்பில்

தோட்ட நிர்வாகத்தால் பெண் தொழிலாளிகளுக்கு அநீதி விளைவிக்கப்படுவதாக கூறி சாமிமலை, ஸ்டொக்கொம் தோட்டம், சோலங்கத்தை பிரிவைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்கள் திங்கட்கிழமை 09.03.2015 அன்று பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டனர்.

சுமார் 110பேர் இந்த பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர். கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர், தோட்ட நிர்வாகம் நட்டத்தில் இயங்குவதாகக் கூறி, பெண் தொழிலாளர்களிடமிருந்து மேலதிகமாக தேயிலை பறித்து தருமாறு கோரியுள்ளது. அதனையடுத்து, நாளொன்றுக்கு பெண் தொழிலாளி ஒருவரிடமிருந்து 9 கிலோ கிராம் தேயிலையை தோட்ட நிர்வாகம் எடுத்துகொண்டதுடன் மழைக் காலங்களில் அதனை 15 கிலோ கிராமாக அதிகரித்துக்கொண்டது.

இந்நிலை இன்றுவரை தொடர்வதாகவும் இதன்மூலம் தங்களுக்கு அநீதி அழைக்கப்படுவதாகவும் கூறியே மேற்படி தோட்டத்தின் பெண் தொழிலாளர்கள் 09.03.2015 அன்று பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுப்பட்டனர். இதேவேளை, 3 வருடங்களுக்கு முன்னர் தோட்டத்திலுள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ஒரு காஸ் அடுப்பும் சிலிண்டரும் தோட்ட நிர்வாகத்தினால் வழங்கப்பட்டது.

ஆனால் அதற்கான பணத்தை இன்றுவரை தமது மாத சம்பளப் பணத்திலிருந்து தோட்ட நிர்வாகம் அறவிட்டுக்கொள்வதாகவும் தொழிலாளர்கள் இதன்போது தெரிவித்தனர். மேலும், தோட்டத்தில் பறிக்கப்படும் தேயிலை பதனிடப்பட்டு இலண்டனுக்கு அனுப்பப்பட்டு 1 கிலோ கிராம் தேயிலை ஒரு டொலருக்கு விற்பனை செய்யப்படுகின்றது. அப்பணத்தில் குறிப்பிட்டத் தொகையை ‘பெயார் டிரேட் ‘என்ற அமைப்பின் ஊடாக தோட்ட மக்களின் நம்மை கருதி சேகரிப்பதாகவும் தோட்ட நிர்வாகம் ஏற்கெனவே கூறியிருந்தது.

 இருப்பினும், இதனூடாக தோட்ட மக்களின் முக்கிய தேவையாகவுள்ள மலசலகூடம் உள்ளிட்ட முக்கிய தேவைகளைக் கூட இன்றுவரை தோட்ட நிர்வாகம் செய்துகொடுக்கவில்லை என தொழிலாளர்கள் கூறினர்.

 இது தொடர்பில் கருத்து தெரிவித்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் முத்து சிவலிங்கம், ‘தோட்ட நிர்வாகம் நட்டத்தில் இயங்குவதாக கூறியமையாலே நாம் 3 கிலோ தேயிலையை அதிகமாக பறித்துக்கொடுக்க சம்மதித்தோம். ஆனால், மூன்று வருடங்கள் முடிந்துள்ள நிலையிலும் தற்போதும் மேலதிகமாக தேயிலை பறித்துக் கேட்பது நியாயமான விடயம் இல்லை’ எனக் கூறினார்.