செய்திகள்

தோல்வியடைந்த ஜனாதிபதியை பிரதமராக்கும் முயற்சியே நுகேகொடையில் நடந்த கூட்டம்: அசாத்

நாட்டில் பெரும்பான்மை மக்களால் நிராகரிக்கப்டப்ட இனவாத சக்தியை மீண்டும் கொண்டுவர மேற்கொள்ளும் ஒரு முயற்சியாக நுகேகொடைக் கூட்டம் உள்ளது. இனவாத அடிப்படையிலேயே மக்கள் அதற்கு அழைத்து வரப்பட்டனர். அது ஒரு அரசியல் கூட்டமல்ல என்று தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மத்திய மாகாண சபை அங்கத்தவருமான அசாத் அலி மடவளையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

பொதுமக்களால் ஒதுக்கப்பட்டு தோல்வியடைந்த ஒரு ஜனாதிபதியை பிரதமராக்கும் முயற்சியில் குறிப்பிட்ட ஒரு சிலர் இணைந்துள்ளனர். அதற்காக நுகேகொடையில் ஒரு கூட்டம் நடத்துவதாகக் கூறினர். அதனை அரசியல் கூட்டமாக நடத்தவில்லை. இனவாத அமைப்புக்களை ஒன்று திரட்டி ஏற்கனவே சாவு மணி அடிக்கப்பட்ட இனவாதத்தைப் பற்றி பேசி மக்களை அழைத்து வந்தனர்.

குறிப்பாக பொதுபலசேனா போன்ற அமைப்புக்கள் ஊடாக மாநாடுகளை நடத்தி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தது. பிவித்துரு, ஹெல உறுமய, தேசிய சுதந்திர முன்னணி, பொதுபலசேனா போன்ற பேரினவாத அமைப்புக்களே இக்கூட்டத்தை வழிநடத்தின. எனவே இது ஒரு அரசியல் கூட்டமல்ல.

இனவாதிகளால் நடத்தப்பட்ட இனவாதக் கூட்டம் பற்றி ஒன்று மட்டும் கூற முடியும். கடந்த ஜனாதிபதித் தேர்தரலில் 98 சதவீத முஸ்லிம்களும் தமிழ் மக்களும் இன வாதத்திற்கு எதிராக வாக்களித்தனர். நாட்டின் பெரும்பான்மை மக்களால் நிராகரிக்கப்பட்ட அந்த இனவாத சக்தியை மீண்டும் கொண்டுவர மேற்கொள்ளும் ஒரு முயற்சியாக இது உள்ளது என்றார்.