செய்திகள்

நடராஜா ரவிராஜ் கொலை வழக்கில் சந்தேகநபர்களின் இரத்த மாதிரிகளை பரிசோதிக்க உத்தரவு

யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினருமான நடராஜா ரவிராஜ் படுகொலை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் நால்வரின் இரத்தமாதிரிகளை எடுத்து டீஎன்ஏ பரிசோதனைக்கு உட்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் நிரோஷ பெர்ணான்டோ உத்தரவிட்டுள்ளார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பிரதான சந்தேகநபரான முனசிங்க உட்பட கடற்படை அதிகாரிகள் மூவர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். அந்த வழக்கு நேற்று செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோதே மேலதிக நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார்.

ரவிராஜ் எம்.பி.யும் அவரது மெய்பாதுகாவலரான பொலிஸ் சார்ஜனட் லக்ஷ்மன் லொக்குவெலவும் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கடற்படை அதிகாரிகள் இருவரும் முனசிங்க ஆராச்சிகே நிலந்த சம்பத் முனசிங்க என்றழைக்கப்படும் நேவி சம்பத் என்பவருமே கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.