செய்திகள்

நடிகர் சங்கத் தலைவராக விஷாலுக்கு விருப்பமிருந்தால் போட்டியிட்டு வெற்றி பெறட்டும்: சரத்குமார்

நடிகர் சங்கத் தலைவராக விஷாலுக்கு விருப்பம் இருந்தால் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறட்டும் என்றார் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான ஆர்.சரத்குமார்.

திருச்சியில் அவர் அளித்த பேட்டி:

தோல்வி பயத்தில் ஆர்.கே.நகர் தொகுதியில் எதிர்க்கட்சிகளே ஒதுங்கியுள்ள நிலையில், டிராபிக் ராமசாமி போட்டியிடுவதால் எவ்வித பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் முதல்வர் ஜெயலலிதாவை ஆதரித்து பிரசாரம் செய்வேன்.

எனக்கும், நடிகர் விஷாலுக்கும் தனிப்பட்ட முறையில் எவ்வித பிரச்னையும் இல்லை. சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து தவறான கருத்துகள் பேசுவது கண்டிக்கத்தக்கது. நடிகர் சங்கத் தலைவராக வர வேண்டும் என்றால் அவர் தேர்தலில் போட்டியிட்டு ஜெயிக்கட்டும். நடிகர் சங்கத் தலைவர் பதவிக்கு மீண்டும் நான் போட்டியிடுவேன்.

பிரதமர் நரேந்திர மோடி வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு நாட்டின் வளர்ச்சிக்கான வாய்ப்புகளை மேற்கொண்டு வரும் நிலையில், இந்தியாவின் வளர்ச்சிக்காக மக்கள் எதிர்பார்க்கும் எண்ணங்களை செயல்படுத்திட அவர் முன்வர வேண்டும்.

கூட்டணி எந்த அளவில் உருவாகிறது, எந்த கொள்கையின் அடிப்படையில் உருவாகிறது என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். நான் தான் முதல்வர் என்று கூறிக் கொள்ளும் ஒவ்வொரும் இணைந்து கூட்டணி அமைத்தால் அந்த கூட்டணி எப்படியிருக்கும் என்பதை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

அதே நேரத்தில் அதிமுக தலைமையில் உள்ள கூட்டணி வலுவான கூட்டணி. எனவே வரும் பேரவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும். இக்கூட்டணியில் உள்ள சமத்துவ மக்கள் கட்சி கூடுதல் இடங்களில் போட்டியிடுவது குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் என்றார் சரத்குமார்.

பேட்டியின் போது, கட்சியின் பொதுச் செயலர் கரு.நாகராஜன், கொள்கை பரப்புச்செயலர் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதைத் தொடர்ந்து கட்சியின் நிர்வாகிகள் கட்சி வளர்ச்சிக்காக நிதியளித்தனர்.