செய்திகள்

நடிகர் மீசை முருகேசன் காலமானார்

தமிழ்த் திரையுலகில் முத்திரை பதித்த நடிகர் மீசை முருகேசன் சென்னையில் தனது 84 ஆவது வயதில் நேற்று சனிக்கிழமை காலமானார்.

சிறிது காலமாக உடல்நலக் குறைவுடன் இருந்த மீசை முருகேசன் சென்னை, வடபழனியில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.

கோவை இடிகரைப் பகுதியைச் சேர்ந்த மீசை முருகேசன், 1985-ஆம் ஆண்டு “சுகமான ராகங்கள்’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்.

தொடர்ந்து “உயிரே உனக்காக’, “உன்னால் முடியும் தம்பி’, “பூவே உனக்காக’, “பிரிவோம் சந்திப்போம்’, “அமைதிப் படை’, “ஊமை விழிகள்’ உள்ளிட்ட படங்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார். இதுவரை 100-க்கும் அதிகமான திரைப்படங்களில் நகைச்சுவை, குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

மீசை முருகேசனின் உடல் சென்னை, வடபழனி குமரன் காலனியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இறுதிச் சடங்கு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு போரூர் மின் மயானத்தில் நடைபெறுகிறது.