செய்திகள்

நடிகை சன்னி லியோன் மீது வழக்குப்பதிவு

மகாராஷ்டிர மாநிலம், தாணே காவல் நிலையத்தில், இணையதளங்களில் ஆபாசத் தகவல்களை வெளியிட்டதாக ஹிந்தி நடிகை சன்னி லியோன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக போலீஸார் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

சன்னி லியோனுக்கு எதிராக அஞ்சலி பாலன் (30) என்பவர் தாணேயில் உள்ள டோம்பிவாலி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், இணையதளங்களை தான் பார்வையிட்டபோது, அதில் சன்னி லியோன் தொடர்பாக பல்வேறு ஆபாசப் படங்கள், ஆபாசத் தகவல்கள் இடம்பெற்றதை பார்த்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல், சன்னி லியோன் பெயரில் உள்ள இணையதளத்திலும் ஆபாச விடியோ காட்சிகள் இடம்பெற்றிருப்பதை பார்த்ததாகவும், இது நாட்டு மக்களின் மனதில் விஷத்தைப் பாய்ச்சும் செயல்; குறிப்பாக சிறார்கள் இதனால் பாதிக்கப்படுவார்கள் என அஞ்சலி பாலன் தெரிவித்துள்ளார்.

அந்தப் புகாரின் அடிப்படையில், சன்னி லியோனுக்கு எதிராக இந்திய தண்டனையியல் சட்டம், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், இதுதொடர்பாக கூடுதல் விசாரணைக்காக இந்த வழக்கை தாணேயில் உள்ள இணையதள குற்றப்பிரிவுக்கு டோம்பிவாலி போலீஸார் மாற்றியுள்ளனர் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.