செய்திகள்

நடைபெறப்போகும் பொதுத் தேர்தல் தமிழர்களுக்குத் தீர்க்கமானது: திருமலையில் சம்பந்தன்

“இன நெருக்கடிக்கு நிலையான அரசியல் தீர்வு ஒன்றைக் காண்பதற்கு பொதுத் தேர்தலின் பின்னர் புதிதாக பதவிக்கு வரும் அரசுடன்தான் நாம் பேச்சு வார்த்தைகளை நடத்த வேண்டும். சர்வதேசம் எமது பிரச்சினையை உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கும் நிலையில், நடைபெறப் போகும் தேர்தல் முக்கியமானதாகும்’ எனத் தெரிவித்துள்ள தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், “இதனால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இந்தத் தேர்தலில் பலமான ஒரு வெற்றியைப் பெற்றுக்கொள்வது அவசியமாகும்’ எனவும் வலியுறுத்தியுள்ளார்.

திருமலையில் தமிழரசுக் கட்சியின் மத்திய கூட்டம் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற போது நிகழ்த்திய சிறப்புரையிலேயே சம்பந்தன் இதனைத் தெரிவித்தார். தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்ற இந்தக்கூட்டத்துக்கு உரையாற்றிய சம்பந்தன் மேலும் முக்கியமாகக் கூறியதாவது;

“நடைபெறப்போகும் பொதுத்தேர்தல் தமிழர்களைப் பொறுத்தவரையில் மிகவும் தீர்க்கமானதாக இருக்கும் எனக் கருதப்படுகின்றது. என்றுமில்லாதளவுக்கு தமிழர்களின் பிரச்சினை இன்று சர்வதேச அளவில் முதன்மைப்படுத்தப்பட்டுள்ளது. அந்நிலையில் அரசியல் தீர்வு ஒன்றை நாம் பெறவேண்டியுள்ளது.

புதிதாக ஆட்சிக்கு வரப்போகும் அரசுடன் தான் நாம் பேச்சு நடத்தி தீர்வைப் பெறவேண்டியவர்களாக உள்ளோம். இதற்கு நாமும் பலமாக இருக்க வேண்டும். இதற்கு குறைந்தது 20 உறுப்பினர்களையாவது நாம் பெறவேண்டும். இதற்கு தனிப்பட்ட வேட்பாளர்கள் யார் என்பதை விட, கட்சி முக்கியம் என்பதன் அடிப்படையிலேயே எமது பிரசாரங்கள் அமைய வேண்டும்.

இதனைவிட தேர்தல் விஞ்ஞாபனத்தை தயாரிப்பதற்கான பணிகளையும் ஆரம்பித்துள்ளோம். இதில் அரசியல் தீர்வு தொடர்பாகவும் கவனம் செலுத்தப்படும். இதில் மக்களுடைய பிரச்சினைகளும் முன்னிலைப்படுத்தப்படும்.

கூட்டமைப்பை பிளவுபடுத்துவதற்கான முயற்சிகளுக்கு நாம் இடமளிக்கக் கூடாது. ஒற்றுமையாக பலமான ஒரு அமைப்பாக இருப்பதன் மூலமாகவே எமது உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முடியும். நாம் பிளவுபட்டால் அரசியல் தீர்வு என்பது ஒரு எட்டாக்கனியாகி விடும்’ எனவும் தெரிவித்தார்.