செய்திகள்

நமது 20ம் திருத்த உரையாடல்களில் கூட்டமைப்பு மீண்டும் இணைந்தில் மகிழ்ச்சி: மனோ கணேசன்

திங்கட்கிழமை அறிவிக்கப்பட்ட 125 தொகுதி கணக்கு, வெள்ளிக்கிழமை 145 தொகுதி கணக்காக மாற்றப்பட்டது தென்னிலங்கையில் வாழும் தமிழர்களுக்கு மாத்திரமல்ல, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழர்களுக்கும் ஒப்பீட்டளவில் முன்னேற்றகரமானது என்பது உணரப்படவேண்டும்.

வடக்கில் குறிப்பாக யாழ் மாவட்டத்தில் இன்றைய பதினோரு தொகுதிகள் என்பது குறிப்பிட்ட காலத்துக்கு மாற்றப்படாமல் வைக்கப்பட வேண்டும் என்றும், தென்னிலங்கையில் வாழும் தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இங்கு புதிய தனித்தொகுதிகளும், புதிய பல்-அங்கத்தவர் தொகுதிகளும் உருவாக்கப்பட இடம் கொடுக்க வேண்டும் என்றும் கருத்தொருமை கட்சிகள் மத்தியில் ஆரம்பத்தில் ஏற்பட்டது.

ஆனால், தொகுதிகள் 125 ஆக குறைக்கப்பட்டால் இவை தென்னிலங்கை தமிழ் பேசும் மக்களின் எதிர்பார்ப்புகளை மட்டுமல்ல, வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களின் எதிர்பார்ப்புகளையும் சின்னாபின்னா படுத்திவிடும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார். இது தொடர்பில் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,

“தொகுதி எண்ணிக்கை குறைய, குறைய வடக்கிலும், கிழக்கிலும் இப்போதைய ஆசன எண்ணிக்கை குறையும். தென்னிலங்கையில் இன்று இருப்பதும், இனி வரும் என எதிர்பார்க்கப்படுவதும் ஆபத்தை சந்திக்க வேண்டி வரும். எனவே 20ம் திருத்த விவகாரத்தில் ஒட்டு மொத்த ஒருமைப்பாடு தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் மத்தியில் ஏற்பட வேண்டும். இந்நிலையில் நமது கலந்துரையாடல்களில் சிறிது காலம் விலகி இருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு இப்போது மீண்டும் இணைந்து கொண்டதை வரவேற்கின்றேன்.

செவ்வாய் கிழமை நடைபெற்ற கலந்துரையாடலில் எம்பீக்கள் செல்வம் அடைக்கலநாதன், எம். ஏ. சுமந்திரன் ஆகியோர் பங்கு பற்றினர். பாராளுமன்றத்தில் இந்த மசோதா வரும்போது தொகுதி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படுவதற்கான வாய்ப்பு நிச்சயம் இருக்கிறது. அதன்போது தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுநிலை மட்ட வாக்களிப்பில் தொகுதிகளை அதிகரிக்கும் நோக்கில் வாக்களிக்க வேண்டுமென கோருகிறேன்.

அதேபோல் சிறு மற்றும் சிறுபான்மை கட்சிகளில் கோரிக்கையான இரட்டை வாக்கு முறைமையை அமைச்சரவை முற்றாக நிராகரித்து விட்டது. இது தொடர்பாக நமது போராட்டம் தொடரும். இதை நாம் இந்த 20ம் திருத்த சட்டமூலம் பாராளுமன்றம் செல்வதற்கு முன்னர் மீண்டும் வலியுறுத்த வேண்டும். இதற்கு ஒட்டுமொத்த சிறு மற்றும் சிறுபான்மை கட்சிகள் மத்தியில் ஒருமைப்பாடு தொடர வேண்டும்.