செய்திகள்

நல்லை ஆதீன முதல்வரின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

உலக வாழ் தமிழ்மக்களும் இலங்கையில் வாழும் பௌத்த இன மக்களும் ஒன்றிணைந்து கொண்டாடும் பண்டிகையாக இந்தப் புத்தாண்டுப் பண்டிகை அமைகிறது. இந்தப் புத்தாண்டுப் பண்டிகையைக் கொண்டாடும் அனைவருக்கும் இனிய மன்மத வருட புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

இந்த நாட்டிலே நிரந்தரமானதோர் அமைதியும், சமாதானமும், சந்தோசமும் மலர வேண்டுமென இறைவனிடத்தில் மன்றாடுகிறேன்.

எல்லாவற்றுக்கும் தலைவனாக இருக்கின்ற இறைவனின் அருளால் இலங்கைத் தமிழருடைய நிரந்தர அமைதிக்கும், சமாதானத்துக்கும் சந்தோசத்திற்கும் மலர்ந்திருக்கும் புத்தாண்டு வழி செய்ய வேண்டும்.

இவ்வாறு தெரிவித்துள்ளார் நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக பரமாச்சார்ய சுவாமிகள்.

புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மலர்ந்திருக்கின்ற புத்தாண்டு மன்மதன் என்ற பெயருடன் மலர்ந்திருக்கிறது. மன்மதன் என்றால் அழகு, சிறப்பு என்றெல்லாம் பொருள்படும்.

ஆகவே மன்மதன் என்ற பெயருடன் பிறந்திருக்கின்ற இந்தப் புத்தாண்டு உலக வாழ் தமிழ்மக்களுக்கு மகிழ்ச்சியைத் தருவதுடன் இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கும் நிம்மதியான மகிழ்ச்சியான வாழ்வை வழங்க வேண்டுமென வாழ்த்தி வரவேற்கிறோம்.

பண்டிகைகள் என்பது மனிதனை மனித நேயத்துடன் வாழ வழி சமைக்கின்றது.கலாசாரப் பண்புகளோடு எமது அடையாளத்தைப் பேணும் பண்டிகையாகவும். சித்திரைப் புத்தாண்டு அமைந்துள்ளது. இந்தப் புத்தாண்டு தினத்திலே தலையிலே மருத்து நீர் தேய்த்து, புத்தாடைகள் அணிந்து, சிற்றுண்டிகள் உண்டு, பெரியவர்களை நமஸ்காரம் செய்து அம்மா, அப்பா, குரு பெரியவர்களை வணங்கி அவர்களுடைய கைகளால் காசினை வாங்குகிறோம்.

அவ்வாறு வாங்குகின்ற போது செல்வம் எங்களிடம் வருடம் முழுவதும் நிலையாக இருக்குமென நம்பப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் சமூக ஒற்றுமையைக் கொண்டு வரும் பண்டிகையாகவும் சித்திரைப் புத்தாண்டு அமைந்துள்ளது. கயிறிழுத்தல், உறி அடித்தல், கிளித்தட்டு, மாட்டு வண்டிச் சவாரி போன்ற விளையாட்டு நிகழ்வுகளும் இப் பண்டிகை நாட்களில் இடம்பெறுவது வழக்கம்.

இவ்வாறான விளையாட்டு நிகழ்வுகள் மூலம் வென்றவர் தோற்றவரை மதிப்பது போன்ற மனிதநேயப் பண்புகள் மனிதனிடத்திலே வளர்கின்றன.

தமிழ் கலாசாரத்தையும், ஒற்றுமையையும் பேணும் வகையில் இப்பண்டிகைகள் அமைந்துள்ளன. இந்த விளையாட்டு நிகழ்வுகள் சிந்தனைக்குரியனவாகவும் விளங்குகின்றன.

நீண்டகாலமாகத் தமிழ் இனத்தினுடைய விடிவு ஏற்பட வேண்டுமென நாமனைவரும் எண்ணிக் கொண்டிருக்கிறோம். இவ்வாறான கொண்டாட்ட நிகழ்வுகளினூடாக எங்களுடைய பண்பாட்டையும், நல்ல சிந்தனைகளையும் தமிழ்மக்கள் கொள்ள வேண்டுமென்பது எங்களுடைய விருப்பமாகவிருக்கிறது.

நாம் நம்முடைய கலாசாரத்தை, பண்பாட்டைப் பேணுவதுடன் நல்ல சிந்தனைகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். இந்த வேளையில் உலகம் முழுவதும் பரந்து வாழும் தமிழ்மக்களனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

நல்ல சிந்தனையோடு, மனுநீதியோடு நாமனைவரும் வாழ்வதற்கு இறைவனுடைய திருவருளை வேண்டி இந்த நாட்டிலே நிரந்தரமான அமைதி, சாந்தி, சமாதானம், சகவாழ்வு கிடைக்க வேண்டுமெனப் பிரார்த்திக்கின்றேன் என்றார்.