செய்திகள்

நாமல் விண்ணப்பம்; மகிந்த இதுவரை விண்ணப்பிக்கவில்லை

எதிர்வரும் பொதுத்தேர்தலில்  ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி  சார்பாகப்  போட்டியிடுவதற்காக நாமல் ராஜபக்ஷ உட்பட  முன்னாள் ஜனாதிபதி  மகிந்த ராஜபக்ஷ தரப்பைச் சேர்ந்த பலர் விண்ணப்பங்களை அனுப்பி வைத்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரான  டாக்டர்  ராஜித சேனராட்ன  தெரிவித்தார்.

அரசாங்க தகவல்  திணைக்களத்தில்  நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும்  செய்தியாளர் சந்திப்பின் போது எதிர்வரும்  பொதுத்தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த பிரதமர் வேட்பாளராகக் களமிறங்கவுள்ளதாக வெளியாகும் செய்திகள் தொடர்பாக ஊடகவியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அப்படி அவரால் பிரதமர் வேட்பாளராகப் போட்டியிட முடியாது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிட விரும்புவபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. அதற்கு மகிந்த ராஜபக்ஷ விண்ணப்பித்துள்ளதாக அறியக்கிடைக்கவில்லை. ஆனால்  அவரின் மகன் நாமல்  ராஜபக்ஷ மற்றும்  அவருடன் இருக்கும் பலர் விண்ணப்பித்துள்ளனர்.

இதே வேளை முன்னாள் ஜனாதிபதி தனக்குப் பாதுகாப்பு குறைவு  எனக் கூறிக்கொண்டிருக்கின்றார். அவருக்கு வீட்டில் ஓய்வாக இருப்பதற்கு பாதுகாப்பு போதுமானது. அவர் வெளியில் விகாரைகளுக்குச் சென்று அரசியல் செய்வதற்காக பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்பதைக் கூறிக்கொள்கின்றேன்.

பௌத்த விகாரைகளில் மகாநாயக்க தேரர்களாக இருப்பவர்கள் அங்கு எடுபிடிகளாக (அபித்தியர்) இருக்க விரும்புவார்களா? ஆனால் எமது முன்னாள் ஜனாதிபதி  அதனைச் செய்ய விரும்புவார?  எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.