செய்திகள்

நாய்கள் ஜாக்கிரதை படத்தைத் தொடர்ந்து எங்க காட்டுல மழை

வாலி பிலிம் விஷன்ஸ் தயாரிப்பில், ‘குள்ள நரிக் கூட்டம்’ படத்தை இயக்கிய ஸ்ரீபாலாஜி தற்போது இயக்கியுள்ள படம் ‘எங்க காட்டுல மழை’.

இந்தப் படத்தில் மிதுன் மகேஸ்வரன் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக ஸ்ருதி ராமகிருஷ்ணன் நடிக்கிறார். மிதுன் மகேஸ்வரன் ஏற்கெனவே ‘சென்னையில் ஒரு நாள்’, ‘சுற்றுலா’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மற்றும் அருள்தாஸ், அப்புக்குட்டி, சாம்ஸ், மதுமிதா, யோகி ராம் மற்றும் பலர் நடித்துள்ளார்கள். இவர்களோடு இந்தப் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் படம் முழுவதும் வரும் ஒரு கதாபாத்திரத்தில் நாய் ஒன்று நடித்துள்ளதாம்.

குழந்தைகளை கவரும் விதத்தில் நாய் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதாம். இது முழுக்க முழுக்க காமெடி ஆக்‌ஷன் படம். சென்னையில் வெட்டியாக சுற்றிக்கொண்டிருக்கும் நாயகன் மிதுன், தனது நண்பன் அப்புக்குடிக்காக ஒரு ரிஸ்க் எடுக்கிறார். அதன் விளைவாக ஹீரோயின் ஸ்ருதிக்காகவும் ரிஸ்க் எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட, அதனால் ஏற்படும் விளைவுகளும், அதனை ஹீரோ எப்படி சமாளிக்கிறார் என்பதும் தான் இந்த படத்தின் கதை. ஆதலால் காதல் செய்வீர் படத்திற்கு ஒளிப்பதிவு செய்த சூர்யா ஏ.ஆர் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஸ்ரீவிஜய் இசையமைக்கிறார்.

இதுகுறித்து படத்தின் இயக்குனர் ஸ்ரீபாலாஜி கூறியதாவது,

“இந்தப் படத்துக்கு ‘எங்க காட்டுல மழை’ன்னு பேர் வச்சாலும் வச்சோம், படத்தோட படப்பிடிப்பு நடக்கும் போதுலாம் மழை வந்துக்கிட்டேயிருந்தது. மலேசியாவுக்கு போயி படப்பிடிப்பு நடத்தினோம், அங்கேயும் மழை பெய்து ஷுட்டிங்கை பாதிச்சுது.

இந்தப் படத்துல ஹீரோ எடுக்கிற இரண்டு ரிஸ்க்தான் படத்தோட கதை, ஒரு ரிஸ்க் நண்பனுக்காக, இன்னொரு ரிஸ்க் காதலிக்காக எடுக்கிறாரு.

இந்தப் படத்துல நாயும் ஒரு முக்கிய கதாபாத்திரத்துல நடிச்சிருக்கு. மிதுன், அப்புக் குட்டியோட நாயும் வந்து சேர்ந்துக்கும். குழந்தைகளுக்காகத்தான் இந்த நாய் பாத்திரம் வச்சோம்.

இந்த நாய் பாத்திரத்துல நடிக்கிறதுக்காக நிறைய நாய்களைப் பார்த்தோம். எனக்கு வழக்கமான சினிமாவுல நடிக்கிற நாய் பிடிக்கலை. நாங்க இந்தப் படத்துல தேடிப் பிடிச்சி நடிக்க வச்சிருக்கிற நாயோட தோற்றத்துல ஒரு க்யூட்னஸ் இருக்கும். அது மட்டுமில்லாம இந்த நாய்கிட்ட ஒரு மேனரிசம் இருக்கு. அது அடிக்கடி புருவத்தை தூக்கிக்கிட்டேயிருக்கும். எனக்கு அது ரொம்ப பிடிச்சிருந்தது.

அப்புறம் இந்த நாய்க்கு மூணு மாசம் டிரெயினிங் கொடுத்து, வெல்ஃபேர்ல அப்பிளை பண்ணி நடிக்க வச்சோம். இந்த நாயை அவங்க வீட்டுல ரொம்ப செல்லமா வளர்த்துட்டாங்க. அதை வீட்டுல பார்க்கும் போது, ஏசி ரூம்ல, மெத்தைலதான் படுத்துக்கிட்டிருந்த்து. அதுக்கு ஏசி கார், ஐஸ்க்ரீம், 5 ஸ்டார் சாக்லெட் இப்படி அதுக்குப் பிடிச்சதை மட்டுமே கொடுத்தோம்.

மதியம் சாப்பிடுச்சின்னா இரண்டு மணி நேரம் போய் தூங்கிடும். அதுக்கப்புறமாதான் அதை வச்சி ஷுட்டிங்கே எடுக்க முடியும். படத்துல நாயோட நடிப்பு நிச்சயமா பேசப்படும்,” நாயை நல்ல விதமாகக் கவனித்துக் கொண்ட விஷயத்தையும் சுவாரசியமாகப் பகிர்ந்து கொண்டார் இயக்குனர்.

சென்னை, பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வரும் இப்படம் வரும் மே மாதம் வெளியாக உள்ளது. விலங்குகளை வைத்து படம் இயக்கி வெற்றி பெற்ற இராம.நாராயணன் மறைந்தாலும், அவருடைய டிரெண்ட் இன்னும் மறைவில்லை.