செய்திகள்

நீதிபதி குமாரசாமியை விமர்சித்தால் அவமதிப்பு வழக்கு: எச்சரிக்கும் பார் கவுன்சில்

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பளித்த கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமியை தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்யும் அரசியல்வாதிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் டி.செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு நீதிபதி பிறப்பிக்கும் தீர்ப்பில் குறைபாடுகள் இருந்தால், உள்நோக்கம் இல்லாமல் அந்த தீர்ப்பை விமர்சனம் செய்வதில் தவறில்லை.

ஆனால், அரசியல் காரணங்களுக்காக தீர்ப்பு மீது மட்டுமில்லாமல், நீதிபதி குமாரசாமியையும் கடுமையாக விமர்சிப்பது ஆரோக்கியமானதல்ல. தீர்ப்பு குறித்து அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவிக்கும்போது, குமாரசாமி இவ்வாறு தீர்ப்பு வழங்கியுள்ளார் என ஒருமையில் பேசுவதாகவும், அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் பதவி வகிக்கும் ஒரு நீதிபதியை ஒருமையில் குறிப்பிடுவது ஏற்புடையது அல்ல.

கட்சித் தலைவர்கள் தங்களது அரசியல் நாடகத்தை, நீதித்துறை நடவடிக்கையின் வாயிலாக அரங்கேற்றம் செய்யக்கூடாது. இனிமேல் நீதிபதி குமாரசாமியை தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்தால், சம்பந்தப்பட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்று தெரிவித்துள்ளார்.