செய்திகள்

நெருங்கி வந்த ஈரான் கப்பல் அமெரிக்கா சுட்டு எச்சரிக்கை

பாரசீக வளைகுடா கடல் பகுதியில், ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க போர் கப்பலுக்கு மிக நெருக்கமாக, ஈரானின் துணை ராணுவ படையினரின் கப்பல் வந்ததை அடுத்து, எச்சரிக்கை விடுக்கும் விதமாக, அமெரிக்க படையினர் துப்பாக்கியால் சுட்டனர்.மேற்கு ஆசியாவில் அமைந்துள்ள பாரசீக வளைகுடா கடல் பகுதியில், ரோந்துப் பணியில் அமெரிக்க போர் கப்பல் ஈடுபட்டு இருந்தது.அப்போது, மேற்காசிய நாடான ஈரானின் துணை ராணுவ புரட்சி படைக்கு சொந்தமான ரோந்து கப்பல், அமெரிக்க கப்பலுக்கு, 200 அடி துாரத்தில் நெருங்கி வந்தது. இதனால், பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது.

இது குறித்து, அமெரிக்க கப்பல் படையினர், ‘ரேடியோ’ வாயிலாகவும், ஒலிபெருக்கி உதவியுடனும் எச்சரிக்கை விடுத்தனர்.அதையும் பொருட்படுத்தாமல், ஈரான் நாட்டு கப்பல் நெருங்கி வந்ததை அடுத்து, எச்சரிக்கை விடுக்கும் விதமாக, துப்பாக்கியால் சுட்டனர். அதன் பின், ஈரான் கப்பல் விலகி சென்றது. இது தொடர்பான, ‘வீடியோ’ காட்சிகளை, அமெரிக்க கடற்படை வெளியிட்டது. ‘இது போல பாதுகாப்பற்ற முறையில் ஈரான் படையினர் கப்பலை இயக்குவது, சமீபத்தில் இது இரண்டாவது முறை’ என, அதிகாரிகள் தெரிவித்தனர்.(15)