செய்திகள்

நேபாளத்தில் சிக்கியுள்ள 311 தமிழர்களை மீட்டு வர தமிழக அரசு நடவடிக்கை

பூகம்பத்தினால் பெரும் அழிவை சந்தித்துள்ள நேபாளத்தில் 311 தமிழர்கள் சிக்கியுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. நேபாளத்தில் நேற்று பயங்கர பூகம்பமும், அதனைத் தொடர்ந்து நில அதிர்வுகளும் ஏற்பட்டு வருகின்றன. பூகம்பத்தில் சிக்கி சுமார் 2000க்க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து அங்கு மீட்புப் பணி நடந்து வருகிறது. எனவே, பலியானவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது

இந்நிலையில், நேபாளத்தில் தமிழகத்தை சேர்ந்த 311 பேர் சிக்கி தவிப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 25.04.2015 அன்று காலை 11.41 மணிக்கு நேபாளத்தில் கடுமையான நில அதிர்வு ஏற்பட்டு கட்டடங்கள் இடிந்து விழுந்து நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். நிலநடுக்கம் குறித்த தகவல் கிடைக்க பெற்றவுடன் தமிழ்நாட்டை சார்ந்த எவரேனும் இதில் சிக்கியிருந்தால் அவர்களை மீட்பதற்கான நடவடிக்கையை தமிழக அரசு உடனே எடுத்தது.

தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் / மாநில துயர்தணிப்பு ஆணையர், மாநில அவசரகால செயலாக்க மைய அலுவலகத்தை உடனடியாக தயார் நிலையில் இருக்கச் செய்தார். டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் ஒரு கட்டுப்பாட்டு அறை தயார் நிலைக்கு கொண்டுவரப்பட்டது. மேலும் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகங்களில் உள்ள கட்டுப்பாட்டு அறைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டு நேபாளத்தில் சிக்கி உள்ள தமிழர்களின் பெயர், நேபாளத்தில் தங்கியுள்ள இடம் மற்றும் அவர்களது தொலைபேசி எண் ஆகியவற்றை அவர்களின் உறவினர்களிடமிருந்து பெற அறிவுறுத்தப்பட்டது. 26.04.2015 அன்று பிற்பகல் வரை தமிழ்நாட்டிலிருந்து நேபாளம் சென்ற யாத்திரிகர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் உறவினர்களிடமிருந்து 15 தொலைபேசி அழைப்புகள் பெறப்பட்டன. இதன்மூலம் தமிழ்நாட்டைச் சார்ந்த 311 பயணிகள் மற்றும் யாத்ரிகர்கள் நேபாளத்தில் சிக்கித் தவிப்பதாக தகவல்கள் பெறப்பட்டுள்ளன. இது குறித்து தேவையான மேல் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு புதுதில்லியிலுள்ள தமிழ்நாடு இல்ல அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு இத்தகவல்களை அளிக்கவும் நேபாளத்திலிருந்து திரும்பிவரும் தமிழர்கள் குறித்த தகவல்கள் பெறவும் தமிழ்நாடு இல்ல அலுவலர் ஒருங்கிணைப்பாளராக வெளியுறவுத்துறை அமைச்சக அலுவலகத்தில் பணிகளை மேற்கொண்டுவருகிறார். டெல்லி விமான நிலையத்தில் நேபாளத்திலிருந்து திரும்பிவரும் தமிழர்களை தமிழ்நாடு இல்லத்திற்கு அழைத்துவரவும் அவர்கள் தமிழகத்தில் தத்தம் இடங்களுக்கு திரும்பச் செல்ல தேவையான ஏற்பாடுகளை செய்யவும் இரு அலுவலர்கள் டெல்லி விமான நிலையத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். நேபாளத்தில் சிக்கித் தவிக்கும் தமிழகத்தைச் சார்ந்தவர்களை மீட்க தக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவர்கள் டெல்லி வந்தவுடன் தமிழ்நாடு இல்லத்தில் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் டெல்லியிலிருந்து தமிழ்நாடு வருவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.