செய்திகள்

நைஜீரிய பஸ் நிலையத்தில் குண்டை வெடிக்கச் செய்த இளம் பெண்! ஐவர் பலி

நைஜீரியாவின் பஸ் நிலையத்தில் ஒரு பெண் தனது கைப்பையில் வைத்திருந்த குண்டை வெடிக்க செய்ததில் 5 பேர் பலியானர்கள். 15 பேருக்கு மேல் படுகாயம் அடைந்துள்ளனர்.

வடகிழக்கு நைஜீரியாவின் கோம்பி நகரத்தின் பேருந்து நிலையத்திற்கு இரவு சுமார் 8.30 வந்த பெண் ஒருவர், பொதுமக்கள் அதிகம் இருந்த பகுதியில் தனது கைப்பையை வைத்துவிட்டு கையடக்கத் தொலைபேசியில் பேசுவது போல அங்கிருந்து நழுவிவிட்டார். அந்த பெண் அங்கிருந்து அகன்ற சிறிது நேரத்திலேயே பையில் இருந்த சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் அங்கு பேருந்துக்காக காத்திருந்த 5 பேர் பலியானார்கள். மேலும் 15 பேருக்கு மேல் படுகாயம் அடைந்தார்கள்.

போகோஹாரம் தீவிரவாதிகளுக்கு எதிராக அண்டை நாடுகளுடன் சேர்ந்து நைஜீரியா ராணுவம் மேற்கொண்டு வரும் தாக்குதலால் அவர்கள் ஆதிக்கம் செலுத்திய பகுதியில் இருந்து துரத்தப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் தங்களின் தாக்குதல் உத்தியை மாற்றிக் கொண்டு கொரில்லா தாக்குதல்களை நடத்தி வருகிறார்கள். இந்த தாக்குதல் கூட அவர்களால் தான் நிகழ்த்தப்பட்டிருக்கும் என நம்பப்படுகின்றது.