செய்திகள்

பங்களாதேசில் மேலும் ஒரு வலைத்தள எழுத்தாளர் படுகொலை

பங்களாதேசில் மேலும் ஒரு வலைத்தள எழுத்தாளர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

வலைத்தளங்களில் சுதந்திரமாக கருத்துக்களை பதிவு செய்து வரும் எழுத்தாளர்களை அச்சுறுத்தும் வகையில் அந்த நாட்டில் கொலை வெறி தாக்குதல் அதிகரித்து வருகிறது.
அபிஜித் ராய் என்ற வங்காள-அமெரிக்க கட்டுரையாளர் கடந்த பிப்ரவரி மாதம் தன் மனைவியின் கண் முன்னே கொலை செய்யப்பட்டார். அதன்பின்னர் அரசியல் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்து வந்த வாஷிகுர் ரகுமான் மிஷூ என்பவர் கடந்த மார்ச் மாதம் வெட்டி கொல்லப்பட்டார்.

இந்த நிலையில் மதச்சார்பற்ற வகையில் புnளாக்குகளில் கட்டுரை எழுதி வந்த ஆனந்த பிஜோய் தாய் என்ற எழுத்தாளர் இன்று காலை சில்ஹெட் நகரில் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

முகமூடி அணிந்து வந்த நபர்கள் கத்தியால் அவரை கொலை செய்திருப்பதாகவும் இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.