செய்திகள்

பசில் ராஜபக்ஷ இன்று நாடு திரும்புகிறார்: பாராளுமன்றத்துக்கும் செல்வார்?

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பொரு ளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்ஷ இன்று நாடு திரும்பவுள்ளார். முன்னைய ஆட்சிக் காலத்தில் பாரிய ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாகக் குற்றஞ் சாட்டப்பட்டுள்ள பசில் ராஜபக்ஷவைக் கைதுசெய்ய கடுவெல நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ள நிலையில் அவர் இன்று நாடு திரும்பவுள்ளார்.

இந்த நீதிமன்ற உத்தரவுக்கமைய தாம் நாடு திரும்புவதாக பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த நிலையில் நாடு திரும்பும் அவர் கைது செய்யப்படலாம் என்றும் அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரிய வருகிறது.

‘திவிநெகும’ நிதியிலிருந்து பல்லாயிரம் மில்லியன் கணக்கில் நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக அவரது பெயரில் குற்றஞ் சாட்டப்பட்டு அது தொடர்பில் முன் வைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இன்று நாடு திரும்பும் பசில் ராஜபக்ஷவை மீண்டும் அரசியலில் இணைத்துக்கொள்வதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன. மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன்று பசில் ராஜபக்ஷவை வரவேற்கவுள்ளதுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துகொள்ளுமாறு அவரைக் கோரவுள்ளதாகவும் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

தங்காலையிலுள்ள கால்டன் இல்லத்தில் விரிவான பேச்சுவார்த்தையொன்றை ஏற்பாடு செய்து தருமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் பிரசன்ன ரணதுங்க கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிய வருகிறது. எனினும் மீண்டும் அரசியலில் ஈடுபடும் எண்ணம் தமக்குக் கிடையாது என பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.