செய்திகள்

பதவி விலகப்போவதாக பைர் முஸ்தபா அறிவிப்பு: அமைச்சுப் பணிகளில் அதிருப்தி?

விமான சேவைகள் இராஜாங்க அமைச்சராக மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தில் பதவியேற்றுக்கொண்ட பைஸால் முஸ்தபா அமைச்சுப் பதவியிலிருந்து விலகப்போவதாக வெளியான செய்திகளை உறுதிப்படுத்தியிருக்கின்றார். இருந்தபோதிலும், இது தனது தனிப்பட்ட காரணங்களால் எடுக்கப்பட்ட முடிவு எனவும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.

தனது வழக்கறிஞர் தொழிலில் முழுக்கவனம் செலுத்தவுள்ளதாகவும், அந்தப் பணியில் முழுநேரமாக ஈடுபடுவதற்கு தமது அமைச்சுப் பதவி தடையாக இருக்கும் என்று கருதுவதாகவும் கூறியுள்ளார். தனது அமைச்சுப் பதவி தொடர்பில் விரைவில் முடிவொன்றை எடுக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸல் முஸ்தபா விளக்கமளித்துள்ளார்.

இலங்கையின் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நூறு நாள் வேலைத்திட்டத்துக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் முதலீட்டு ஊக்குவிப்பு துணை அமைச்சராக பதவி வகித்தார். ஜனாதிபதித் தேர்தலுக்கு இரு வாரங்களுக்கு முன்னர் பதவி விலகிய அவர், மைத்திரிபாலவை ஆதரித்தார்.  புதிய அரசாங்கத்தில் விமானசேவைகள் இராஜாங்க அமைச்சராக அவர் பொறுப்பேற்றிருந்தார்.

விமான சேவைகள் அமைச்சின் கீழ் வரவேண்டிய சில பணிகளை துறைமுகம் மற்றும் கப்பல்துறை அமைச்சின் கீழ் கொண்டுவந்துள்ளதாக அண்மையில் வெளியாகியிருந்த அறிவிப்புகள் பைஸர் முஸ்தபா அமைச்சுப் பதவியிலிருந்து விலகிவிட காரணமாக இருக்கலாம் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

எனினும், இந்த ஊகங்கள் தொடர்பில் உறுதிப்படுத்த மறுத்துவிட்ட பைஸர் முஸ்தபா தற்போது சிங்கப்பூர் பயணமாகியுள்ளார். சிங்கப்பூரிலிருந்து நாடு திரும்பிய பின்னர் தன்னுடைய பதவி விலகல் கடிதத்தை அவர் ஜனாதிபதியிடம் கையளிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.