செய்திகள்

பரப்புரைகள் முடிவுக்கு வந்தன: இன்று முதல் விஷேட பாதுகாப்பு ஏற்பாடு நடைமுறையில்

ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில், தேர்தல் பிரசாரங்கள் அனைத்தும் நேற்று நள்ளிரவுடன் முடிவுக்கு வந்திருக்கின்றன. அதனையடுத்து இன்று முதல் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்க நடவடிக்கை எடுத்திருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

பிரசார நடவடிக்கைகள் யாவும் நிறைவடைந்துள்ள நிலையில் சட்டவிரோதமாக பிரசாரங்களில் ஈடுபடவோ தேர்தல் சட்டங்களை மீறும் வகையில் செயற்படவோ எவருக்கும் இடமளிக்கப்படமாட்டாது என்று குறிப்பிட்ட அவர், தேர்தல் விதிகளை மீறும் எவராக இருந்தாலும் தராதரம் பாராது நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நாளை மறுதினம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்காக இன்று செவ்வாய்கிழமை முதல் சுமார் 68 ஆயிரம் பொலிஸார் தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தப்பட இருப்பதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.

வாக்கு எண்ணும் நிலையங்களில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடும் பொலிஸார் நாளை முதல் தமது கடமைகளை பொறுப்பேற்க செல்ல இருப்பதாக குறிப்பிட்ட அவர் 5 ஆயிரம் அதிரடிப்படையினர் உட்பட 71,100 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தேர்தல் சட்டத்தை மீறுவோருக்கு எதிராக தராதரம் பாராது நடவடிக்கை எடுப்பதாக தேர்தல் சட்டத்தை மீறுவோருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்குமாறு சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தேர்தலை நீதியாகவும் சுதந்திரமாகவும் நடத்த பொலிஸார் தமது முழுமையான பங்களிப்பை வழங்க இருப்பதாக குறிப்பிட்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர், தேர்தல் பிரசார பணிகள் நேற்று நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ளதால் தேர்தல் சட்டத்திற்கு அமைவாக நடந்து கொள்ளுமாறு அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களை கோருவதாகவும் குறிப்பிட்டார்.