செய்திகள்

பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி: 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி

கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்துள்ளது.

இப்போட்டியில் நாணயசுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 138 ஓட்டங்களில்சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை 315 ஓட்டங்களை பெற்றது.. 177 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி 3-வது நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 171 ஓட்டங்களை எடுத்திருந்தது. அசார் அலி 64 ரன்களுடனும் யூனிஸ்கான் 23 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

Dimuth Karunaratne

பின்னர் நேற்று நடைபெற்ற 4-வது நாள் ஆட்டத்தில் தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணி 2-வது இன்னிங்சில் 329 ஓட்டங்களில் சகலவிக்கெட்களையும் இழந்தது. இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரசாத் நான்கு விக்கெட்டுகளும் சமீரா மூன்று விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

பாகிஸ்தான் 152 ரன்கள் அதிகம் பெற்றுள்ளதால் இலங்கை அணிக்கு 153 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இலங்கை அணி 2-வது இன்னிங்சை தொடங்கும் முன் மழை குறுக்கிட்டது. அத்துடன் 4-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

இதனையடுத்து இன்று காலை இறுதி நாள் ஆட்டம் திட்டமிட்டபடி தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக திமுத் கருணாரத்னவும் கித்துறுவன்வித்தhனகேயும் களமிறங்கினர். இதில் அதிரடியாக விளையாடியவித்தhனகே 23 பந்தில் 34 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சங்ககாரா ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட்டாக அடுத்து மத்யூஸ் களமிறங்கினார். கருணாரத்வும் அதிரடியை கையாண்டு 57 பந்தில் 50 ரன்கள் குவித்து அவுட்டாக திரிமானே மத்யூசுடன் ஜோடி சேர்ந்தார்.

இருவரும் நிதானமாக விளையாடி 26.3 ஓவர்களில் 153 ரன்கள் குவித்து தங்கள் அணியை வெற்றி பெற வைத்தனர். முதல் டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. எனவே அடுத்து நடைபெறவுள்ள 3வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியை வெல்வதில் இரு அணிகளுக்குமிடையே கடும் போட்டி நிலவும் என்பது குறிப்பிடத்தக்கது.