செய்திகள்

பாகிஸ்தானை வாட்டி, வதைக்கும் வெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை 1200 ஆக உயர்ந்தது: சிந்து மாகாணத்தில் பள்ளிகள் மூடல்

பாகிஸ்தானில் இன்னும் கோடை வெயில் வாட்டி, வதைத்துவரும் நிலையில் சிந்து மாகாணத்துக்குட்பட்ட கராச்சி உள்ளிட்ட பல பகுதிகளில் உச்சகட்ட வெயில் சுட்டெரித்து வருகின்றது.

இந்த வெயிலின் கொடுமையை தாங்க முடியாமல் கடந்த ஒருவார காலத்தில் நூற்றுக்கணக்கானோர் பலியாகியுள்ளனர். இந்நிலையில், இன்றைய நிலவரப்படி சிந்து மாகாணத்தில் மட்டும் வெயிலின் தாக்கத்துக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1200 ஆக உயர்ந்துள்ளது.
இதில் சுமார் ஆயிரம் பேர் கராச்சி நகருக்கு உள்பட்ட பகுதிகளிலும், எஞ்சிய இருநூற்றுக்கும் அதிகமானோர் சிந்து மாகாணத்தின் பிற பகுதிகளிலும் பலியாகியுள்ளனர் என இன்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலி எண்னிக்கை மேலும் அதிகரிப்பதை தடுக்கும் வகையில் சிந்து மாகாணத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் சில அரசு அலுவலகங்களை மூடிவிடும்படி அம்மாகாண முதல் மந்திரி குவைம் அலி ஷா உத்தரவிட்டுள்ளார்.