செய்திகள்

பாகிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையில் உள்ளவர்களுக்கு கிரிக்கெட் அறிவு எதுவும் கிடையாது: இம்ரான் சாடல்

பங்களாதேஷ் அணியுடனான மூன்று ஓரு நாள்போட்டிகளையும் பாக்கிஸ்தான் தோற்றதை கடுமையாக விமர்சித்துள்ள பாக்கிஸ்தான் அணியின் முன்னாள் தலைவர் இம்ரான்கான் அந்த நாட்டின் கிரிக்கெட்டின் வரலாற்றில் இதுவே மிகவும் வீழ்ச்சிக்குரிய விடயம் என தெரிவித்துள்ளார்.

பாக்கிஸ்தான் கிரிக்கெட்டில் காணப்படும் திறமையை அலட்சியம் செய்தல், குடும்ப செல்வாக்கு போன்ற விடயங்கள் காரணமாக அந்த நாட்டின் கிரிக்கெட் பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு கிரிக்கெட் கட்டமைப்பை மிகவும் மோசமான முறையில் கையாளும் பலவீனமான கிரிக்கெட் கட்டமைப்பிடமிருந்து வேறு எதனையும் எதிர்பார்க்க முடியாது. முதலில் பாக்கிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகத்தில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும்.

பாக்கிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையில் தகுதியற்றவர்கள், குடும்ப செல்வாக்கால் இடம்பிடித்தவர்கள் இருக்கும் வரை பாக்கிஸ்தான் கிரிக்கெட் முன்னோக்கி நகராது.  எங்களது கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையில் உள்ளவர்களுக்கு கிரிக்கெட் குறித்து எந்த அறிவும் கிடையாது.  எங்களிடம் அற்புதமான திறமையுள்ளது ஆனால் மோசமான கிரிக்கெட் கட்டமைப்பினால் அந்த திறமையை நாங்கள் பயன்படுத்த முடியாத நிலை காணப்படுகின்றது.

கிரிக்கெட் உலகின் தலைசிறந்த வீரர்களே பாக்கிஸ்தானில் காணப்படும் திறமை குறித்து வியந்துள்ளனர். ஆகவே பிழை எங்குள்ளது. திறமையை இளம்வயதிலேயே இனம்கண்டு வளர்க்கவேண்டும், பாக்கிஸ்தானின் அணிதலைவர் மிஸ்பா உல் ஹக்கிற்கு 34 வயதிற்கு தேசிய அணியில் விளையாடுவதற்கான கிடைத்தது. அஜ்மலிற்கும் இந்த நிலைதான்.  அவுஸ்திரேலியா பின்பற்றுகின்ற வழிமுறைகளை பயன்படுத்தி பாக்கிஸ்தான் தனது உள்நாட்டு கட்டமைப்பை பலப்படுத்தவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.