செய்திகள்

பாகிஸ்தான் சென்றடைந்த ஜனாதிபதிக்கு பிரதமர் நவாஸ் நேரில் சென்று வரவேற்பு

மூன்று நாள் பயணமாக நேற்று இரவு பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தை சென்றடைந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீப், விமானப்படைத் தளத்தில் நேரடியாகச் சென்று வரவேற்றார்.

இஸ்லாமாபாத்தில் உள்ள நூர் கான் விமானப்படைத் தளத்தை சென்றடைந்த, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அவரது குழுவினரை, பாகிஸ்தான் பிரதமர் மற்றும், வெளிவிவகார அமைச்சு உயரதிகாரிகள் பலரும், நேரில் சென்று வரவேற்றனர்.

அத்துடன், ஜனாதிபதிக்கு, 21 பீரங்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. மைத்திரிபால சிறிசேன, முன்னதாக பயணிகள் விமானம் மூலம் கராச்சியில் உள்ள ஜின்னா அனைத்துலக விமான நிலையத்தைச் சென்றடைந்திருந்தார். அங்கு, சிந்து மாகாண முதலமைச்சர்,  மற்றும் உயரதிகாரிகள் அவரை வரவேற்றனர்.

அங்கிருந்து மைத்திரிபால சிறிசேன பாகிஸ்தான் விமான சேவையின் சிறப்பு விமானம் மூலம், இஸ்லாமாபாத்தில் உள்ள நூர் கான் விமானப்படைத் தளத்தைச் சென்றடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.