செய்திகள்

பாக்கு நீரினையூடாக தரைவழிப் பாதை அமைப்பது குறித்து தெரியாது: அஜித் பெரேரா

இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் வகையில் பாக்கு நீரிணையூடான வீதி அல்லது ரயில் சேவைகுறித்து இலங்கையுடன் இந்தியா எந்தவொரு பேச்சுவார்த்தையையும் முன்னெடுக்கவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அண்மையில் இந்திய மத்திய அரசாங்கம் இரு நாடுகளுக்கும் இடையிலான போக்குவரத்து மேம்படுத்த ரயில் மற்றும் வீதி சேவைகளை முன்னெடுக்க உத்தேசித்துள்ளதாக ஊடக செய்திகள் வெளியாகியுள்ள போதிலும் இது குறித்து இலங்கையுடன் எந்தவொரு பேச்சுவார்த்தையும் இடம்பெறவில்லை என வெளிவிவகார பிரதி அமைச்சர் அஜித் ஜீ.பெரேரா தெரிவித்துள்ளார்.

இந்தியப் பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சரின் இலங்கை விஜயத்தின்போதும் கூட இத குறித்து பேசப்படவில்லை என வெளிநாட்டு ஊடகம் ஒன்றிடம் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பங்களாதேஷ் நேபாளம் பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகளுக்கு வீதிப் போக்குவரத்தை தொடங்கியது போல் இந்தியாஇலங்கை இடையேயும் வீதி அமைக்க இந்திய மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக இந்திய மத்திய வீதிப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்ததாக அண்மையில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

கடல் பாலம் அல்லது கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்கப்படவுள்தாக அவர் தெரிவித்துள்ளார்.இராமேஸ்வரத்தின் தனுஷ்கோடியில் இருந்து இலங்கை எல்லை வரை 23 கிலோ மீற்றர் தூரம் உள்ளது. இடையே கடல்வழி பாலம் அமைப்பதால் இரு சார்க் நாடுகளிடையேயான வீதிப்போக்குவரத்தும் தொடர்பும் மேம்பாடு அடையும் என அவர் கூறியிருந்தார்.