செய்திகள்

பாடசாலை மாணவர்களிடையே மேம்படுத்த வேண்டிய நடத்தைக் கோலங்கள்

மருத்துவர். சி. யமுனாநந்தா

இன்று உலகில் விஞ்ஞானம் வளர்ச்சி அடைந்து வருகின்றது. இதனால் தொழில்நுட்பம் பெருகி, வசதிகள் அதிகரித்துவிட்டன. தேவைக்கு மேலும் அதிக பணம் சேகரிப்பதில் மனிதன் குறியாக இருக்கின்றான். ஆனால் மனிதனிடம் நிம்மதியும், மகிழ்ச்சியும் பெருகி உள்ளதா என நோக்கினால் அது அவ்வளவாக இல்லை என்றே தோன்றும்.

அறிவைத் தேடுவது கல்வியின் ஓர் அங்கமே தவிர அது கல்வியின் முடிவாகி விடாது. தற்போதுள்ள கல்வி வெறும் வேலைதேடும் கல்வியாக மட்டும் இருக்கக்கூடாது. உண்மையான கல்விமூலம் சமூகத்தின் சிறந்த மனிதர்களை உருவாக்கிவிடல் அவசியம். படித்தவர்கள் பெருகியபோதும், பண்புள்ளவர்கள் இவ்வுலகில் பெருகாததினாலேயே உலகில் அநீதி தழைக்கின்றது. வெறும் பட்டங்களுடன் மட்டுமல்லாது, கட்டுப்பாடு, அடக்கம், பொறுப்பு, கடமையுணர்வு, சுயகட்டுப்பாடு, பொறுமை என்பனவும் மனிதனுக்கு அவசியமானவை. ஒருவன் தன்னை உரியமுறையில் தகுதிப்படுத்திக் கொள்வதும், தனது மனதைச் சரியான பக்குவநிலையில் வைத்துக் கொள்வதுமே அவனது முன்னேற்றத்திற்கான முதற்படிகளாகும்.

ஒவ்வொருவரும் தமது ஆளுமைகளைச் சிறப்பாகச் செதுக்கிக் கொள்ள வேண்டும். பொறுமையாக இருத்தல் வேண்டும். சகிப்புத்தன்மையை வளர்த்துக் கொள்ளல் வேண்டும். கோபத்தினை அடக்கப் பழக வேண்டும். பகை உணர்வைவிட நட்பு உணர்வுதான் அதிகம் சாதிக்கும் என்பதனை உணர வேண்டும். எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடாது. மற்றவர்களில் குறைகாணும் தன்மையைத் தவிர்த்தல் நல்லது.

எமது சிந்தனைகள் நேரான எண்ணங்களைத் தாங்கியதாக அமைதல் வேண்டும். அதாவது துன்பம் நேரும்போதும் அதனூடாக நல்லதைக் காணல் வேண்டும். நடப்பதெல்லாம் நன்மைக்கே என்ற எண்ணம் அவசியம் ஆகும்.

எமது நேரத்தையும், எமது சக்தியையும் நாம் செம்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். நேரத்தினை நாம் வீணடிக்கக்கூடாது. நாம் எதனைச் செய்தாலும் நல்லதா அன்றில் கெட்டதா என நோக்க வேண்டும். தவறானவற்றையும், தீங்கானவற்றையும் நீக்குதல் வேண்டும்.

3எம்மை மீறிய விடயங்கள் சில நேரங்களில் எமது மகிழ்ச்சி குன்றக் காரணமாக அமையலாம். எமது பலவீனங்கள், எமது குறைகள், தெளிவின்மை, மன உறுதி இன்மை, பொறுமை இன்மை, சகிப்புத்தன்மை இன்மை என்பனவையே எமது மகிழ்ச்சியைக் குலைக்கும் காரணிகள்.

எமது பேச்சுக்களிலும், செயலிலும் நிதானம், முன்யோசனை, தெளிவான சிந்தனை இருந்தால், எமது உரையாடல்கள் ஏனையவர்களைப் பாதிக்காது. அவ்வாறு அமையின் நாம் மகிழ்ச்சியை இழக்க வேண்டியநிலை வராது.

தீய எண்ணங்களை பெருக்கிய மனதில் மகிழ்ச்சி கேள்விக்குறியாகின்றது. தூய்மையான மனமே மகிழ்ச்சியின் ஊற்று. அதேபோல் அடங்காத மனதில் ஆனந்தம் அருகாது. எனவே மகிழ்ச்சிக்கு மன அடக்கம் அவசியம்.

மன அமைதியினைத் தரும் பொருள்களையும், சூழ்நிலைகளையும் மனிதன் தேடுகின்றான். ஆனால் அவனின் மனதில் எதிர்பார்ப்பு, ஏமாற்றம், குற்ற உணர்வு, பொறாமை, அதிருப்தி போன்ற உணர்வுகள் நிறைய உருவாகின்றன. இதனால் அவன் நிம்மதியினை இழக்கின்றான். அதிருப்தி நிம்மதியை இழக்கச் செய்கின்றது. தவறு செய்தாலும் நடந்ததை நினைத்துக் குற்ற உணர்வு ஏற்பட்டு நிம்மதியினை இழக்க நேரிடும். எனவே தவறு செய்யாது இருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.

மற்றவர்களைத் தேவையில்லாமல் ஆராய்பவன் தனது மகிழ்ச்சியைக் கெடுத்துக் கொள்கின்றான். பொறாமை உடையவன் மகிழ்ச்சியை இழக்கின்றான். திருப்தி அடையாமல் மகிழ்ச்சியை இழக்கின்றான். மனதையும், பேச்சையும் கட்டுப்பாடாக வைத்திருக்காதவன் மகிழ்ச்சியை இழக்கின்றான். மற்றவர்களில் குற்றம் காண்பவர்கள் மகிழ்ச்சியை இழக்கின்றனர். மற்றவர்களின் விமர்சனங்களைச் சரியானமுறையில் ஏற்றுக் கொள்ளாதவன் மகிழ்ச்சியை இழக்கின்றான். மிகையான கோபமும், வெறுப்பும் உடையவன் மகிழ்ச்சியை இழக்கின்றான்.

நான் நன்றாக இருக்கின்றேன் என்ற உணர்வு உடல் ஆரோக்கியம், தேவையான பொருளாதாரம், அமைதியான குடும்பம், நல்ல உறவுகள் சார்பாக அமைந்து இருந்தாலும் மனம் திருப்தியாக இருந்தால் அவ்வுணர்வு ஏற்படும்.
சந்தேகப்புத்தி அதிகம் உடையவர்கள் மனித உறவகளில் பலவீனம் அடைந்து விடுவார்கள். அவர்களது மனதில் எதிர்மறை உணர்வு இருப்பதால் மற்றவர்களுடன் நல்ல உறவு வைத்திருப்பது கடினமாகிவிடுகின்றது. வாழ்க்கை மீதும், பிற மனிதர்கள் மீதும் அநாவசியமாக அளவுக்கு அதிகமாக அவநம்பிக்கை கொள்ள சந்தேகப்பார்வை வழி வகுக்கின்றது. வீணாக ஒருவர் மீது சந்தேகம் கொள்ளக்கூடாது. மாணவர்கள் கல்வி கற்கும்போது பாடங்களில் சந்தேகம் கேட்பது அறிவை வளர்த்துக்கொள்ள உதவும்.

உறவு அல்லது நட்பு என்று நோக்கும்போது யாருடன் நட்பு வைத்துக் கொள்ள வேண்டும் என நாம் ஆராய வேண்டும். நட்பைத் தொடங்குமுன் நன்றாக எம்மையும் மற்றவரையும் எடைபோட வேண்டும். மற்றவரைப் புரிந்துகொள்ளமுன் எம்மை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். நட்பின் ஆழம் காலத்துடன் அதிகரிக்கலாம் அல்லது குறையலாம். தவறான நட்புகளில் இருந்து நாகரீகமாகவும், பெரும் தன்மையாகவும் விடுவித்துக் கொள்ளல் வேண்டும்.

எமது உறவுகளிற்கிடையே குறிப்பிட்ட சிலருடன் எமது கருத்துக்கள் பிரச்சினைகளைப் பகிர்ந்து கொள்வது எமது வாழ்வில் அவசியமாகின்றது. இது மனதுக்கு ஆறுதலையும், தெம்பையும் தரும். சில தருணங்களில் பிரச்சினைகளுக்கான தீர்வுகளையும், தெளிவையும் தரும். உறவுகள் மனித நல்லுறவுகளின் அடிப்படையிலேயே செய்யப்படுகின்றன. உதவுவதா? அன்றேல் வேண்டாமா? உதவி பெறுவதா? அன்றேல் வேண்டாமா? என்பது தனிப்பட்ட மன இயல்பு, கொள்கைகள் மற்றும் சூழ்நிலைகள், நிர்ப்பந்தங்கள் என்பவற்றைப் பொறுத்து அமையும்.

நாம் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும்போது பிரச்சினைகள் இல்லாதவர்கள் யாரும் இல்லை என்பதையும், பிரச்சினைகள் வரக்கூடாது என்ற நினைவில் இருக்கக்கூடாது என்பதையும், அறிந்திருத்தல் வேண்டும். பிரச்சினைகளை வாழ்வின் யதார்த்தமாக எடுத்து எதிர்கொள்ள வேண்டும். பிரச்சினைகளை நல்லமுறையில் சந்திக்க வேண்டும் என்ற அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். சில பிரச்சினைகள் குறிப்பிட்ட காலத்துடன் மறைந்துவிடும். ஒருவன் மனித உறவுகளில் மிக விழிப்புணர்வோடு இருத்தல் வேண்டும். சிறு சிறு விடயங்களுக்காக, தற்காலிக சிக்கல்களுக்காக உறவுகளைக் கெடுத்துக் கொண்டால் அழிவது அவ்வுறவுகள் மட்டுமல்ல நம் எண்ணங்கள், சிந்தனைகள், நேரம் என்பவற்றுடன் எமது நிம்மதியும் கூட. மனித உறவுகளைக் காப்பாற்றிக் கொள்வது எமக்கு நன்மையளிக்கும்.

மனிதர்கள் உயர்வு மனப்பான்மை உடையவர்களாகும். தாழ்வு மனப்பான்மை உடையவர்களாகவும் அமைந்து உறவுகளின் பாதிப்பை ஏற்படுத்தலாம். உயர்வு மனப்பான்மை உடையவர்கள் கர்வம் மிகுந்தவர்களாக தமக்கு கீழே உள்ளவர்களை அலட்சியப்படுத்துவர், அவமானப்படுத்துவர். இவை தவிர்க்கப்படல் வேண்டும். தாழ்வு மனப்பான்மை உடையவர்கள் பயந்த சுபாவம் உடையவர்களாகச் சமூகத்தில் ஒதுங்கி வாழ்வர். இந்நிலையும் தவிர்க்கப்படல் வேண்டும்.

super-star-student-clipart-starkidsஒருவன் தன்மேல் உள்ள அதிருப்தியினை, தனது குறையினை மற்றவர்மேல் பொறாமைப்படுவதன்மூலம் நிறைவு செய்து கொள்ளலாம் என்ற தவறான அடிப்படையிலேயே பொறாமைப்படுகின்றான். கல்வி, பண்பு, அறிவு ஆகிய விடயங்களில் உள்ள பொறாமைகளை ஆக்கபூர்வமாக மாற்றி வாழ்வில் உயர வேண்டும்.

பதகளித்த மனநிலை, முற்கோபம் உடையவர்களிலும் எதிர்பார்ப்புக்கள் அதிகம் உள்ளவர்களிடமும், அகங்காரம் மிகுந்தவர்களிடமும், திட்டமிடல் இல்லாதவர்களிடமும், உளநிலை பாதிக்கப்பட்டவர்களிலும் ஏற்படும். ஆழ்ந்த மூச்சுப்பயிற்சி, தியானம் என்பன பதகளிப்பு நிலையினைக் குறைக்கும்.

நாம் எமது கோபத்தினைக் கட்டப்படுத்த முடியாத நிலையில் வருவதே கோபம். எமது கோபத்தினைச் சிறிது காலத்திற்குப் பின்நோக்கினால் அது வெறும் காட்சியாகவே அமையும். இன்னும் சிறிது காலத்தில் அக்கோபம் மறைந்துவிடும். எனவே நாம் ஆழ்ந்த கோபத்தினை எவர்மீதும் செலுத்தக் கூடாது.

எமது மனதைப் பாதிக்கின்ற விதத்தில் எழுகின்ற நினைவுகளை நாம் அலட்சியம் செய்தல் வேண்டும். எமது அமைதிக்கு விரோதமான நினைவுகளை அலட்சியம் செய்யக் கற்றுக் கொள்ளல் வேண்டும். கெட்ட நினைவுகளை மறக்கக் கற்றுக் கொள்ளல் வேண்டும். ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றினால் நல்ல நிகழ்வுகளையும், நெகிழ்ச்சியான அனுபவங்களையும் போற்றி வைத்துக் கொள்ளலாம். இதுவே வாழ்க்கையின் வெற்றிக்கான வழியாகும்.

மாணவர்கள் வாழ்வில் வெற்றியடைய சாதனை உணர்வு இன்றியமையாததாகும். ஒருவர் மற்றவர்களில் இருந்து வேறுபட்டு இருக்க வேண்டும் என்ற நிலையில் சாதனை உணர்வு ஏற்படும். மேலும் தன்னிடம் உள்ள ஆற்றலை வெளி உலகுக்கு காட்ட வேண்டும் என்ற உந்தலும் சாதனையை மேற்கொள்ளத் தூண்டும். பிறசாதனையாளர்கள் போல் சாதிக்க வேண்டும் என்று எண்ணுதல், வாழ்வில் இலட்சியம் என்ற தேடலிலும் சாதனையை நிகழ்த்துவர். மேலும் சிலரில் இயந்திர வாழ்வின் விரக்திநிலையிலும் சாதனையைப் புரிய நாட்டம் கொள்வர். இன்னும் சிலர் தடைகளை வென்று சாதிப்பர். மேலும் சிலர் புகழின் மேல் உள்ள நாட்டத்தினால் சாதனை உணர்வு மேலிடுவர். சமூகத்திற்குப் பயனுள்ளவனாக இருக்க வேண்டும் என்ற வகையிலும் சாதனை உணர்வு மேலிடலாம். சாதனை உணர்வு, மாணவர்களிற்கு மிகவும் இன்றியமையாததாகும்.