செய்திகள்

பர்மாவுக்குள் புகுந்து இந்திய அதிரடிப்படை தாக்குதல்? டில்லி செய்தியை மறுக்கும் பர்மா

இந்திய இராணுவத்தின் சிறப்பு அதிரடிப் படையினர் பர்மாவுக்குள் புகுந்து அங்கே செயல்பட்டு வந்த தீவிரவாதிகளின் இரண்டு முகாம்களை அழித்ததாகவும், அங்கிருந்த பல தீவிரவாதிகளைக் கொன்றதாகவும் இந்திய ஊடகங்களில் வெளியான செய்திகளை பர்மிய அரச அதிகாரி மறுத்துள்ளார்.

அப்படியான தாக்குதல் சம்பவம் ஏதும் இடம்பெறவில்லை என்று பர்மிய ஜனாதிபதியின் அலுவலக இயக்குனர் சாட்சே தெரிவித்துள்ளார். அதே நேரம் இந்திய எல்லையையொட்டிய பர்மிய பகுதிகளில் அந்நாட்டு அரச நிர்வாகக் கட்டமைப்பு மிகவும் குறைவாகவே இருப்பதாகவே செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த வாரம் மணிப்பூர் மாநிலத்தில் சென்று கொண்டிருந்த இந்திய இராணுவ வாகனத் தொடரணி மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 18 இராணுவத்தினர் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக இந்தியக் கமாண்டோக்கள் பர்மாவில் உள்ள முகாம்களை தாக்கி அழித்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

இந்த நடவடிக்கை குறித்து செவ்வாய்க்கிழமை பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட செய்திக் குறிப்பில் இந்திய பர்மிய எல்லையையொட்டி தாக்குதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்பட்டிருந்தது.

பர்மாவுக்கள் சென்று தீவிரவாதிகளின் இரண்டு முகாம்களை அழித்துவிட்டு திரும்பிய இராணுவத்தினருக்கு தான் வணக்கம் செலுத்துவதாக இந்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ராத்தோர் ட்வீட் செய்துள்ளார்.