செய்திகள்

பின்லேடனை சுட்டுக் கொன்றவர் இவர்தான்!

பாகிஸ்தானின் அபோட்டாபாதில், கடந்த 2011-ஆம் ஆண்டு அமெரிக்க சிறப்பு அதிரடிப்படை மேற்கொண்ட ரகசிய நடவடிக்கையின்போது, அல்-காய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடனை சுட்டுக் கொன்ற வீரர் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.

ராணுவச் செய்திகளை வெளியிடும் பிரத்யேக வலைதளம் ஒன்றில் இந்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

ராபர்ட் ஓ’நீல் (38) என்ற அந்த வீரர், ஒசாமாவுக்கு எதிரான நடவடிக்கை மேற்கொண்ட அமெரிக்க கடல்படை சிறப்பு அதிரடிப்படையின் (சீல்) 23 பேர் அடங்கிய குழுவில் ஓர் உறுப்பினர்.

அவர்தான் ஒசாமா பின் லேடன் தலையில் மூன்று முறை சுட்டவர் என்று கூறப்படுகிறது. மிகவும் நுணுக்கமாகத் திட்டமிடப்பட்டு, நிறைவேற்றப்பட்ட அந்த நடவடிக்கை குறித்த விவரங்களையும், அமெரிக்க அரசு ரகசியமாகப் பாதுகாத்து வந்தது.

அந்த நடவடிக்கையின்போது நிகழ்ந்தவை குறித்தும், அதில் எத்தனை பேர் பங்கு கொண்டனர் என்பது குறித்தும் இதுவரை தகவல்கள் வெளியிடப்படாமல் இருந்து வந்தது.

இந்நிலையில், முக்கியத்துவம் வாய்ந்த அந்த ராணுவ நடவடிக்கை குறித்தும், அதில் பங்கேற்ற தனது அடையாளத்தையும் ராபர்ட் ஓ’நீல் வெளிப்படுத்தியுள்ளார்.

இதனால், அமெரிக்க அரசு அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சூழல் உருவாகியுள்ளது.

முன்னதாக, புகழுக்காகவும், பணத்துக்காகவும் ராணுவ ரகசியங்களை கடல்படை சிறப்பு அதிரடிப்படை வீரர்கள் வெளியிட்டால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.