செய்திகள்

பிரதமரிடம் நான் ஒருபோதும் மன்னிப்பு கேட்க போவதில்லை: வாசு

பாராளுமன்றத்தில் பிரதமரை தகாத வார்த்தைகளினால் பேசியது குறித்து தான் மன்னிப்பு கேட்கப் போவதில்லை என ஐ. ம. சு. மு. பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார மீண்டும் ஒருமுறை தெரிவித்திருக்கிறார்.

ஒரு தடவைக்கு மூன்று தடவை தான் மன்னிப்பு கோரப் போவதில்லை என்று வலியுறுத்திய அவர் தனக்கெதிராக ஊடக வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டிருப்பதாகவும் கூறினார். கூட்டு எதிர்க் கட்சிகளின் ஊடகவியலாளர் மாநாடு நேற்று அபயாராம விகாரையில் நடைபெற்றது.

எதிர்க் கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா அண்மையில் மகா சங்கத்தினரை சந்தித்த போது வாசுதேவ நாணயக்கார பாராளுமன்றத்தில் வைத்து பிரதமரை தரக்குறைவாக ஏசியது குறித்து மகா சங்கத்தினர் அதிருப்தி வெளியிட்டிருந்தனர். இது தொடர்பில் வாசுதேவநாணயக்கார மன்னிப்பு கோர வேண்டும் எனவும் அவர்கள் கூறியிருந்தனர்.

இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த வாசுதேவநாணயக்கார எம்.பி. ஒருபோதும் தான் இதற்காக மன்னிப்பு கோரப் போவதில்லை என்று குறிப்பிட்டார்.

மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,

பிரதமர் தொடர்பாக நான் பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் என் மீது சில ஊடகங்கள் சேறு பூசி வருகின்றன. பிரதமருடன் மோதுபவர்கள் இலக்கு வைக்கப்பட்டு இவ்வாறு சேறு பூசப்படுகிறது.

இன்று ஊடக வன்முறை காணப் படுகிறது. திட்டமிட்டு எம்மீது ஊடக வன்முறை கட்டவிழ்த்துவிடப்படுகிறது.